புதுப்பிக்கப்பட்ட திருப்பூர் மாநகராட்சி பேருந்து நிலையத்திற்கு கொடி காத்த குமரன் பெயர் சூட்ட கோரிக்கை மனு
பெறுநர்:
மாவட்ட ஆட்சித் தலைவர்,
திருப்பூர் மாவட்டம்.
மதிப்பிற்குரிய அய்யா!
(பொருள்: புதுப்பிக்கப்பட்ட திருப்பூர் மாநகராட்சி பேருந்து நிலையத்திற்கு கொடி காத்த குமரன் பெயர் சூட்ட கோரிக்கை மனு)
வணக்கம்.
திருப்பூர் மாநகரைச் சேர்ந்த பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும், புதுப்பிக்கப்பட்ட திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு கொடி காத்த குமரன் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி, மறைந்த முன்னாள் முதல்வர், கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இப்போது இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. திருப்பூர் என்றாலே குமரன் என்று அறியப்பட்ட நிலையில், பேருந்து நிலையத்திற்கு அந்தத் தியாகியின் பெயரை சூட்டுவதற்கு நீதிமன்றத்தின் கதவுகளை தட்டும் சூழல் வருத்தத்திற்கு உரியது.
திருப்பூர் மாநகராட்சியின் மக்கள் பிரதிநிதிகள், இதனை தன்முனைப்பு பிரச்சினையாக எடுத்துக் கொள்ளாமல், புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு திருப்பூர் குமரன் பெயரை சூட்டுவதற்கு, புதிய தீர்மானத்தை நிறைவேற்றி திருப்பூர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று உரிய ஆலோசனைகளை மாநகராட்சிக்கு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இவண்
யோ சி இரஞ்சித்குமார்,
தலைவர்,
திருப்பூர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி