சமூக நீதிக்கு என்னபின்னடைவு?

சமூக நீதிக்கு என்ன பின்னடைவு?

பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என, உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள பெரும்பான்மைத் தீர்ப்பு குறிப்பிடுகிறது. இந்தத் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கப் போவதாகத் தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், வரும் நவம்பர் 12ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்குத் தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்திற்குப் பின்னடைவு என்று தமிழக முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். எந்த அடிப்படையில் இது பின்னடைவு என்பது குறித்து முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.


சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் அடிப்படைத் தேவைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெற்று மாண்புடன் வாழ வழி அமைத்தல் சமூகநீதியின் முக்கியமான கூறுகளில் ஒன்று. ஒவ்வொருவருக்கும் சமூகத்திற்குள் தங்கள் உரிமைகளைத் தடையின்றிப் பயன்படுத்திக் கொள்வது தான் சமூக நீதி.

கடந்த காலங்களில் நிலவி வந்த சமனற்ற நிலையைச் சீர் செய்யவே அரசியலமைப்புச் சட்டம் மூலம் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே பயன்பெறும் பல்வேறு சமூகப் பிரிவுகளின் இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், பொருளாதார நிலையில் நலிவடைந்த பிரிவினருக்கான ஒதுக்கீடு, எந்த வகையில் சமூக நீதியை வலுவிழக்கச் செய்யும் என்பது புரியவில்லை.

இந்தப் பத்து சதவிகித இட ஒதுக்கீட்டில், உயர் சாதியினர் என்று சொல்லப்படுகின்ற பிராமணர்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள், ரெட்டியார்கள், நாயுடுக்கள், செட்டியார்கள் போன்ற பல்வேறு சாதிப் பிரிவினரும் பயன் பெறுகின்றனர். சமூகத்தில் பொருளாதாரரீதியாக வீழ்ந்து  கிடப்போரைத் தூக்கி நிறுத்துதலும், அவர்களுக்கு உதவுதலும் கூடச் சமூகநீதியாகும். சமூக நீதி என்பது ஒரு சமூகத்தின் அனைத்து தரப்பினரையும், ஏற்றத்தாழ்வின்றி அரவணைத்துச் செல்வதும், வாழ வழி செய்வதும் ஆகும். எந்த விதமான பாகுபாடும் காட்டாமல், நலிவுற்ற நிலையில் உள்ள மக்கள் உயர்வு பெற உரிய வாய்ப்புகளையும், வழிகளையும் ஏற்படுத்தித் தருவதே சமூக நீதியாகும்.

நாட்டின் வளங்கள், வருமானம், வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுவதில் சமத்துவமும், பாரபட்சமின்மையும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்” என்று இந்திய அரசியலமைப்புச் சாசனம் வலியுறுத்துகிறது. ஒருவரின் பொருளாதார நிலை நிலையானது அல்ல; மாறும் தன்மை உடையது என்ற கூற்றையும் கருத்தில் கொண்டால், இந்தப் பிரிவில் இட ஒதுக்கீடு பெற்றோரின் நிலையை, மேம்பாட்டைச் சீராய்வு செய்யும் முறையைக் கொண்டு வரலாம். அதனை விடுத்து ஒட்டுமொத்தமாக எதிர்ப்பது என்பது, சரியான நிலைப்பாடு அன்று.

இந்த மசோதா, நாடாளுமன்ற அவைகளில் விவாதத்திற்கு வந்தபோது ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், தங்களது ஆதரவு நிலையைத் தொடர்வார்கள் என்று நம்புகிறோம்.

 
சமூக அடையாளங்களை முன்னிறுத்தி ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது அநீதி. அதுவே சமத்துவமின்மைக்கு அடித்தளமாகிறது. இனம் மொழி, சாதி, பாலினம், மதம் போன்ற வேறுபாடுகள் இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் தங்களது தனித்துவமான திறமையினை முன்னெடுத்துச் சென்று வாழ்வில் வெற்றி பெறச் சம அளவில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எனவே, தமிழக முதல்வரும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, நலிவடைந்த பிரிவினர்களுக்கான 10 சதவிகித ஒதுக்கீட்டை வரவேற்க வேண்டும்; தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

அன்புடன்

பா குமரய்யா,

மாநிலப் பொதுச் செயலாளர்,

காமராஜர் மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *