பொங்கல் இனிக்குமா?
பொங்கல் இனிக்குமா?
சென்ற ஆண்டு கிடைத்த சூடுபட்ட பூனை அனுபவத்தில், மூட்டைப் பூச்சிக்கு பயந்த கதையாக, இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில், ஒரு கிலோ பஞ்சாப் பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஓர் ஆயிரம் ரொக்கம் வழங்கி கணக்கை முடிக்கத் தயாராகிவிட்டது, தமிழக அரசு; 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2356.67 கோடி செலவில் திட்டம் தீட்டப்பட்டு விட்டது.
கடந்த ஆண்டு மிளகுக்குப் பதில் அந்திமந்தாரை, உதய சூரியனை கண்ட பனி போல் உருகும் வெல்லம் போன்ற தரமற்ற பொருட்களை விநியோகித்துப் பெற்ற கசப்பான பாடங்களைத், தரமான பொருட்களை விவசாய கூட்டுறவு சங்கங்கள், அரசு சார்ந்த நிறுவனங்களில் வாங்கி விநியோகித்திருந்தால் தவிர்த்திருக்கலாம். ஆனால், தமிழக அரசு அப்படியெல்லாம் எதற்கு சிரமப்பட வேண்டும் என்று யோசித்து, இந்த ஆண்டு குறுக்கு வழியில் சென்று விட்டது. அரசு கொடுக்கும் ரொக்கப் பணம் பெரும்பாலும் குடும்பத் தலைவர்கள் மூலம் அரசுக்கே வந்து சேர்ந்திடத்தான் மது விற்பனைக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்படுகிறது என்ற ஐயம் எழுகிறது. பண்டிகைக் காலங்களில் மதுக்கடைகளை மூடி உண்மையிலேயே நாங்கள் மக்கள் நலனை விரும்புவோர் தான் என்பதை, முதல்வர் ஸ்டாலின் எப்போது தான் நிரூபிப்பார்?
இந்தப் பொங்கல் தொகுப்பில் குறைந்த பட்சம் கரும்பையாவது சேர்த்தால், அரசை நம்பி கரும்பை பயிரிட்ட விவசாயிகளுக்கு, பொங்கல் இனிக்கும். பணத்தைக் கையில் கொடுப்பதற்கு பதில் வங்கிக் கணக்கில் செலுத்தினால், கொஞ்சமாவது குடும்பத்திற்கு மிஞ்சுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது தமிழக அரசு உடனே எடுத்திட வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
அன்புடன்
பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர்,
காமராஜர் மக்கள் கட்சி