கள்ள மௌனம் ஏன்? 

கள்ள மௌனம் ஏன்

தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஒன்பதாம் தேதி ஆளுநர்  இரவி அவர்கள் ஆற்றிய உரையின் முதல் பக்கத்தில், இரண்டாம் பத்தியிலேயே ‘1960களில், இந்தியாவின் மற்ற பெரிய மாநிலங்களோடு ஒப்பிடும்போது, சமூக, பொருளாதார, கல்வி, மருத்துவக் குறியீடுகளில் பின்தங்கி இருந்த தமிழ்நாடு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (During the 1960s, Tamil Nadu was lagging behind in social, economic, educational and health indicators when compared to other big States.)

60களில் தமிழகம் பின்தங்கி இருப்பதாகக் கூறுவது ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் ஆட்சிக் காலம் அல்லவா? ஆளுநர் அறிக்கையில் குறிப்பிடும் சமூக, பொருளாதார, கல்வி, உடல் நலக் குறியீடுகளில் வலுவான அடித்தளம் அமைந்தது அந்தப் பெருமக்களின் ஆட்சியில் தானே! இவையெல்லாம் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் சாதித்த சாதனைகள் அல்லவா?

இப்படி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்து, உண்மைக்கு மாறான அறிக்கையை, தமிழக அரசுக்கு வடித்துத் தந்த எழுத்தாளர் யார்? தமிழக முதல்வரும், அவரது அமைச்சரவை உறுப்பினர்களும், முன்னாள் காங்கிரஸ்காரரான சபாநாயகர் அப்பாவு அவர்களும், இதை ஒரு முறை கூடப் படித்துப் பார்க்கவில்லையா? 

முற்றிலும் உண்மைக்கு மாறான இந்தத் தகவல்களைக் கேட்டுக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினரும், சட்டசபை காங்கிரஸ் கட்சியினரும் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? அடுத்த கூட்டணியில் இடம் கிடைக்காது போய்விடும் என்ற அச்சம் தானே! இல்லை என்றால், இதற்கு மறுப்பு தெரிவித்து, எதிர்ப்பு தெரிவித்து  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி அறிக்கை விடுவாரா? வழி வழியாக தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் இடம் பிடிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பெருமக்கள் ஒரு சிறு முணுமுணுப்பையாவது காட்டுவார்களா? என்ற வினாக்களை காமராஜர் மக்கள் கட்சி முன்வைக்கிறது.

அன்புடன்

பா குமரய்யா,

மாநிலப் பொதுச் செயலாளர்,

காமராஜர் மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *