முதல்வரின் உள்ள உறுதியைப் பாராட்டுகிறோம்
முதல்வரின் உள்ள உறுதியைப் பாராட்டுகிறோம்
போதைப் பொருள்கள் பயன்பாடு இல்லாத தமிழகமே எங்கள் லட்சியம் – போதைப் பொருள் விற்பனையாளர்களோடு உறவாடும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் -போதைப் பொருள் விற்பனையாளர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் – போதைப் பொருட்கள் வழக்குகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் – போதைப் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு எதிராக சர்வாதிகாரியாக மாறுவேன் – வேரோடும், வேரடி மண்ணோடும் போதைப் பொருள் விற்பனையை இல்லாமல் செய்வதே எனது இலக்கு – இப்படி பல்வேறு தளங்களில், களங்களில் போதைப் பொருள்கள் பயன்பாட்டிற்கு எதிராக முழங்கி வருபவர் தான் நமது முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள். இந்த நிலைப்பாட்டிற்காக, அவரை நாம் மனம் திறந்து பாராட்டுகிறோம்.
ஆனால் ‘ போதை பொருள்கள் சட்டத்தில் இடம் பெறவில்லை என்பதால் மது வகைகள் போதை தரக் கூடியவை அல்ல; தனிமனித, சமுதாய வாழ்வை சீரழிக்க கூடியவை அல்ல ‘ என்ற முடிவுக்கு முதல்வர் வந்திருப்பார் என்றால் அது நகைமுரணே.
நாளிதழ்களில் வரும் செய்திகளைப் பார்த்தால், உறவுகளுக்கு இடையே நடைபெறும் தாக்குதல்களுக்கு, கொலைகளுக்கு, நெறி பிறழ்தல்களுக்கு மதுப்பழக்கமே அடிப்படைக் காரணமாக உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது . அந்த மது விற்பனைக்குத் தடையின்றி, அரசு விடுமுறை நாட்கள், பண்டிகைகள் என்று எந்த வரம்பும் இன்றி மதுக்கடைகள் திறந்து வைக்கப்பட்டு, போகி என்றும் பொங்கல் என்றும் பாராமல், ரூபாய் 450 கோடி அளவில் விற்பனை நடந்து இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.
நீதிமன்றங்கள் அறிவுறுத்தும் மதுக் கடைகளுக்கான விற்பனை நேரக் கட்டுப்பாடுகளை, மது அருந்திட அனுமதிச்சீட்டு போன்ற ஆலோசனைகளை கருத்தில் கொள்ளாமலே, மது வணிகத்தை அரசின் கையில் வைத்துக் கொண்டே, மக்களை மதுவெனும் போதையின் பிடியில் வைத்துக் கொண்டே, போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று முழங்கி வரும் தமிழக முதல்வரின் உள்ள உறுதியை மீண்டும் ஒரு முறை பாராட்டுகிறோம்.
வணக்கத்துடன்
பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர்,
காமராஜர் மக்கள் கட்சி