வரவு எட்டணா! செலவு பத்தணா!! கடன் ஐந்தணா!!!

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் அவர்களால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமான திட்டங்களும், அறிவிப்புகளும் உள்ளடங்கியதாக இருக்கும் இந்த அறிக்கை வழக்கம் போல் ஆளுங்கட்சியினர் பாராட்டவும், எதிர்க்கட்சியினர் எதிர்ப்பதும் ஆக உள்ளது. காமராஜர் மக்கள் கட்சி இந்த நிதிநிலை அறிக்கை பற்றி தனது கருத்துகளை கீழே தந்துள்ளது.

மது வருமானம் ரூபாய் 45,000 கோடியில் இருந்த 50,000 கோடி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மது வருமானம் உயர்வது, அரசுக்கு அவமானம் என்பது மெத்தப் படித்த அமைச்சர் பெருமக்களுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் ஏன் தெரியவில்லை? நாளிதழ்களில் வெளிவரும் குற்ற நிகழ்வுகள் தொடர்பான செய்திகளில், மதுப் பழக்கம் உருவாக்கும் குற்றச் செயல்களே பெரும்பான்மை இடத்தைப் பெறுகின்றன. இவற்றைக் கண்டு கலக்கம் வராமல் இருக்கும் இவர்களை என்னவென்று சொல்வது? நிதிநிலை அறிக்கையில் திருக்குறளை மேற்கோள் காட்டும் நிதி அமைச்சர் கள்ளுண்ணாமை அதிகாரத்தை மட்டும் ‘ நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ‘ என்று மறந்து விட்டாரா? 

தகுதியுள்ள மகளிருக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதிகள் எவை என்பதைப் பற்றித் தெளிவான விளக்கம் வேண்டும். எல்லாவற்றிற்கும், எதை எடுத்தாலும் அரசை சாந்திருக்கும் நிலைமையை உருவாக்கி வருவது முறையாகத் தெரியவில்லை. மக்கள் தங்கள் சுய உழைப்பினால் உயர்கின்ற சூழலை உருவாக்காமல் அனைத்திற்கும் இலவசம். உதவித் தொகை என்ற போக்கு சரியானது அல்ல.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். திருச்சியில் தன் கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் சிவா இல்லத்தில் நடந்த தாக்குதல்களும், திமுக தொண்டர்கள்(?) காவல் நிலைய சொத்துகளை சேதப்படுத்தியதும், பெண் காவலர் காயமுற்றதும், வேற்றுக் கிரகத்தில் நடந்துவை போலும்! 

நிலப்பதிவுக்கு, பதிவுக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது, சரியான வழிமுறையாக தோன்றவில்லை. நோயுற்ற கால்நடைகளுக்கு மூங்கில் குழாய்கள் மூலம் மருந்து கொடுப்பது போல், தமிழ்நாட்டில் அனைவரையும் குடிக்க வைத்து விட்டால் போதும், வருமானத்திற்கு கவலை இல்லை, மற்ற துறைகளில் வருவாய் மேம்பாடு பற்றி எதற்கு சிந்திக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்று அஞ்சத் தோன்றுகிறது.                                                                                                 

நினைவிடங்களையும் மணிமண்டபங்களையும் கட்டுவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அவற்றிற்குப் பதிலாக தலைவர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் கிராமப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த, அரசு ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்த்த பழைய ஓய்வூதியத் திட்டம், மருத்துவர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை சரி செய்வது, தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரம் செய்வது போன்ற வாக்குறுதிகள், எந்த அறிவிப்புகளும் இன்றி கடந்து செல்லப்பட்டுள்ளன.

ரூபாய் 410 கோடி செலவில் கோவை, விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தொழிற்பேட்டைகள் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக நோயற்றிருக்கும் கும்மிடிப்பூண்டி, புதுக்கோட்டை, மானாமதுரை தொழிற்பேட்டைகளுக்கு மறுவாழ்வு தந்திட அவசர கால சிகிச்சைகள் வேண்டும்.

நடப்பு நிதியாண்டில் ரூபாய் 1500 கோடி செலவில் அடையாறு, கூவம் நதிக்கரைகள் அழகுபடுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனோ, கடந்த காலத்தில் கூவத்தில் படகுப் போக்குவரத்து நடத்தியது நினைவுக்கு வந்து செல்கிறது.

வரும் நிதியாண்டில் மொத்த செலவு 3.08 லட்சம் கோடி, வருவாய் 2.75 லட்சம் கோடி என்றும் 1.40 லட்சம் கோடி கடன் ஆகப் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவு எட்டணா, செலவு பத்தணா, கடன் ஐந்தணா என்ற நிலையாகத் தோன்றுகிறது.

கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களில், தொடங்கப்பட்டவை எவை? முடிவுக்கு வந்தவை எவை ? நிலுவையில் உள்ளவை எவை? போன்ற தகவல்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பகிர வேண்டும் என்றும் காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

வணக்கத்துடன்

பா குமரய்யா                 

மாநிலப் பொதுச் செயலாளர்,  

காமராஜர் மக்கள் கட்சி.                                                                

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *