மக்களை, மேலும் மேலும் மதுவின் மயக்கத்தில், ஆழ்த்துவதுதான் திராவிடமாடல் சாதனையா?

மக்களை, மேலும் மேலும் மதுவின் மயக்கத்தில், ஆழ்த்துவதுதான் திராவிட மாடல் சாதனையா?

இந்திய தேசியக் காங்கிரசை உருவாக்கிய வெள்ளையர்களில் ஒருவரான ஆலன் ஆக்டேவியன் ஹியூம், மதுவினால் வரக்கூடிய அரசின் வருவாய் ‘பாவத்தின் சம்பளம்’ என்று குறிப்பிட்டார். வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக மதுவை ஏற்றுக் கொண்டிருக்கின்ற வெள்ளையர்கள் கூட, மது விற்பனை மூலம் வரும் அரசின் வருமானம் பாவத்தின் சம்பளம் என்று வர்ணித்து இருப்பது நம் சிந்தனைக்குரியது.

1937 இல் இராஜாஜி ஆட்சி அமைந்த போது, முதன் முதலில் சேலம் மாவட்டத்தில் அவர் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார். அந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பித்த போது சேலம் மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கினால் ஏழை எளிய மக்களின் பொருளாதாரம் மேம்பட்டிருப்பதாகவும், அவர்களுடைய வாழ்க்கை வளம் பெற்று இருப்பதாகவும் அனுப்பி வைத்த குறிப்பை இராஜாஜி பதிவு செய்தார்.

1937 முதல் 1972 வரை ஏறக்குறைய 35 ஆண்டுகள், மதுவின் வாசனையையே அறியாத மாநிலமாகத் தமிழகம் இருந்தது. அரசு வருவாயைப் பெருக்குவதற்காக கள்ளுக் கடைகளைத் திறந்து தமிழக மக்களை மதுவிற்கு அடிமை ஆக்கிய மனிதர் தான் கலைஞர் கருணாநிதி என்பதை யாரும் மறுக்க முடியாது. அன்று, கலைஞர் தமிழ்ச் சமுதாயம் முழுவதும் சாராய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதற்கு அடித்தளம் அமைத்தார்.

தந்தையின் பாதையில் எல்லா வகையிலும் பயணிப்பதாக பெருமைப்படும் நம்முடைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள், டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுவை, திருமண விழாக்களில், குடும்ப விழாக்களில், மக்கள் கூடுகின்ற இடங்களில் எல்லாம் கொண்டு சேர்ப்பதற்கான வழிவகைகளை உருவாக்கி இருப்பது நமக்கு ஒன்றும் அதிர்ச்சியை அளிக்கவில்லை. 

சாராய விற்பனை மூலமாக மட்டுமே அரசின் வருவாயைப் பெருக்குவதும், புதிய திட்டங்களை நிறைவேற்றுதல் என்ற போர்வையில் பல லட்சம் கோடி கடன்களை வாங்கித் தமிழக மக்களின் மீது தாங்க முடியாத நிதிச் சுமையை உருவாக்குவதும்தான் உண்மையான திராவிட மாடல் ஆட்சி என்பதை நமக்கு உணர்த்துகிறார், மாண்புமிகு முதல்வர். காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட பண்பாட்டுப் பாரம்பரியப் பெருமைகளை, படுகுழியில் தள்ளிப் புதைப்பதும், ஏழை எளிய மக்களை நிரந்தரமாக மதுவின் மயக்கத்தில் ஆழ்த்தி, அவர்களுடைய உடல் நலனை, செயல்திறனை முழுமையாகச் சீரழித்து சிதைப்பதும் தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளாக விளங்குகின்றன.

தமிழக முழுவதும் உள்ள மக்கள் நலன் சார்ந்த போராளிகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்மக்கள் என்று அனைவரும் ஒன்றாகத் திரண்டு இந்த ஆட்சியின் மதுக் கொள்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும். வரும் ஜூலை 16ஆம் தேதி, பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் கூடும் காமராஜர் மக்கள் கட்சி மாநிலப் பொதுக் குழு, தமிழக முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிராக இடையறாது போராடுவது என்று முடிவெடுக்க இருக்கிறது. மதுவுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் காமராஜர் மக்கள் கட்சி அவர்களோடு கை கோர்த்து களத்தில் நிற்கும்.

41 உயிர்கள், ஆன் லைன் ரம்மி ஆட்டத்தால், உயிர் இழந்தது குறித்துப் பதறித் துடிக்கும் நம் முதல்வர் அவர்கள், ஏழை, எளிய மக்கள், குடும்பம் குடும்பமாய் மதுவின் கொடுமையால் குடும்பத் தலைவர்களை இழந்து, விழி நீர் சிந்தியபடி வீதியில் நிற்பதை ஒரு நொடியாவது சிந்தித்துப் பார்த்தால், இது போன்ற மக்கள் நலனுக்கு எதிரான தன்னுடைய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக் கூடும். ஆனால், சமூக நலன் சார்ந்து அப்படி அவர் சிந்திப்பாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

அன்புடன்

தமிழருவி மணியன்

தலைவர்,

காமராஜர் மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *