“நல்ல சாராயத்தை” குடிக்காமல், “கள்ள சாராயத்தை” குடிக்கலாமா?
“நல்ல சாராயத்தை” குடிக்காமல், “கள்ள சாராயத்தை” குடிக்கலாமா?
அண்மையில் தமிழ்நாட்டில், தமிழக அரசு விற்பனை செய்யும் “நல்ல சாராயத்தை” குடிக்காமல், தங்கள் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட “கள்ள சாராயத்தை” குடித்த மக்கள், 17 பேர் இறந்துள்ளனர்; இது தொடர்பாக, காவல்துறையினர் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பதவி இடைநீக்கம் என்பது காவல்துறையினருடன் நின்று விட்டது, சரிதானா? துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் பெருமக்கள் முன் உதாரணமாகத் திகழ வேண்டாமா?
கள்ளச் சாராயம் குடித்து மரணம் அடைந்தவர்க்கு 10 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கிட உத்தரவிட்ட முதல்வர், நேரிலும் சென்று ஆறுதல் கூறியுள்ளார். நிவாரணத் தொகை இந்த மரணங்கள் தொடர்கதையாக அமைந்திட ஊக்குவிப்புத் தொகையாக அமைந்துவிடக் கூடாது. மக்களை இந்தக் கொடிய பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற காமராஜர் மக்கள் கட்சியின் கோரிக்கை, தமிழக அரசுக்கு உவப்பாக இருக்க வாய்ப்பு இல்லை.
டாஸ்மாக் கடைகளைத் தொடர்ந்து நடத்திட, டாஸ்மாக்கின் இருப்பை நியாயப்படுத்திட, கள்ளச் சாராய மரணங்களைத் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. தெருவுக்கு நான்கு டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்துக் கொண்டு, கடைசிக் குடிமகனும் குடிகாரனாக வேண்டும் என்ற திராவிட மாதிரியை செயல்படுத்திக் கொண்டிருக்கின்ற தமிழக அரசு, மக்கள் நலனைப் பேணுவது தான், தன் முதல் கடமை என்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
மதுவின் பிடியில் இருந்து மக்களை மீட்டெடுக்க அரசையும், ஆளுகின்ற, அரசாண்ட கட்சிகளை, அவர்களுக்கு அனுசரணையாக இருக்கின்ற கட்சிகளை நம்பிப் பயனில்லை. மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் ஓரணியில் திரண்டு, மது அரக்கனின் பிடியில் இருந்து தமிழக மக்களை மீட்டெடுக்க முன்வர வேண்டும்; அவர்களுக்கு காமராஜர் மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும்.
வணக்கத்துடன்
பா குமரய்யா (தொடர்புக்கு: 98410 20258),
மாநிலப் பொதுச் செயலாளர், காமராஜர் மக்கள் கட்சி.