ஜூலை 11 “தாமிரபரணியை மீட்போம்” தாமிரபரணியை காக்க உறுதியேற்போம்!
காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் N.ரங்கநாதன் அறிக்கை;
தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி தமிழகத்தை மட்டுமே வளப்படுத்தும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆக்கிரமிப்புகளாலும், மணல் கொள்ளையாலும், பன்னாட்டு குளிர்பான நிறுவனத்தாலும், ஆலைக்கழிவுகளாலும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
ஒருகாலத்தில் வெண்ணிற மணல் மேடுகளுடன் அழகாக தென்பட்ட தாமிரபரணி, இன்று ஆடையின்றி தவிக்கிறது. இதனால் ஆற்று நீரில் கலக்கும் கழிவுகளை படியச் செய்து தண்ணீரை சுத்தம் செய்யும் இயற்கை வடிகட்டியான மணல், கொள்ளை அடிக்கப்பட்டதால் இன்று சாக்கடை போல காட்சியளிக்கிறது. மூலிகை குணம் நிறைந்த தாமிரபரணி நீரானது, தற்போது குடிக்க மட்டுமல்ல… குளிக்கக் கூட தகுதியில்லாத நீராகிவிட்டது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றது.
தென் மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயம் போன்றவற்றிற்கு ஆதாரமாக தாமிரபரணி மட்டுமே விளங்குவதால், தாமிரபரணியை பாதுகாக்க வலியுறுத்தி காமராஜர் மக்கள் கட்சி தொடர்ந்து போராடியும், குரல் கொடுத்ததும் வருகின்றது.
“தாமிரபரணியை மீட்போம் மனிதகுலம் காப்போம்” என்ற முழக்கத்துடன் சீரழிந்து வரும் தாமிரபரணியை மீட்க மாபெரும் பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்து ‘தாமிரபரணி பிரச்சார இயக்கம்’ என்ற பெயரில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பிரச்சார நிகழ்ச்சிகளை காமராஜர் மக்கள் கட்சி நடத்தி வருகிறது.
இந்நிலையில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பாக, தாமிரபரணியை பாதுகாக்க வலியுறுத்தி, ஜூலை 11 அன்று ஸ்ரீவைகுண்டம் ஆற்றிலிருந்து பிடி மணல் எடுத்து உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெறுகின்றது. தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. அய்கோ அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், கட்சி பாகுபாடு இல்லாமல், நம் மண்ணின் பெருமையான, நீர் ஆதாரமான தாமிரபரணியைக் காக்க அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.
- காமராஜர் மக்கள் கட்சி ,தூத்துக்குடி மாவட்டம்.