தமிழ்ச் சமூகம் இன்னும் பண்பட வேண்டி இருக்கிறது!
தமிழ்ச் சமூகம் இன்னும் பண்பட வேண்டி இருக்கிறது!
நாங்குநேரியில், பட்டியலின மாணவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களால் துன்புறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களால் கண்டிக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்த ஆசிரியர்கள், நமது வணக்கத்திற்கு உரியவர்கள். ஆனால், அந்த மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை உள்வாங்காமல் பட்டியலின மாணவரின் வீட்டிற்குச் சென்று வெறியாட்டம் ஆடியுள்ளனர். எதிர்காலமான மாணவ சமுதாயத்தின் மீதும், இளைய சமுதாயத்தின் மீதும் நம்பிக்கை கொண்டோரை இந்த சம்பவம் அதிர வைத்திருக்கிறது.
அண்ணல் காந்தியும், அம்பேத்கரும், பெரியாரும், இன்ன பிற தலைவர்களும் சமூக நல்லிணக்கத்திற்காகத் தொடர்ந்து ஆற்றிய அரும்பணியை மீறி, வேங்கைவயல், நாங்குநேரி என்று சம்பவங்கள் தொடர்வது தமிழ்ச் சமூகம் இன்னும் பண்பட வேண்டி இருக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்து வைக்கின்றது .
சமூக நல்லிணக்கத்தை மாணவர்களுக்கு இடையே கொண்டு செல்லும் புனிதப் பணியில், ஏனையோரை விட பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கும் பங்கு முக்கியமானது. அதனை அவர்கள் மேலும் செவ்வனே செய்வதற்கான புறச் சூழலை உருவாக்க வேண்டிய கடமை, அரசியல் கட்சிகள், அரசு நிர்வாகம், சமுதாயத் தலைவர்கள், அச்சு, காட்சி ஊடகங்கள், திரைப்படங்கள், பெற்றோர் என அனைவருக்கும் உண்டு என்பதை காமராஜர் மக்கள் கட்சி சுட்டிக் காட்ட விரும்புகிறது.
வணக்கத்துடன்
பா குமரய்யா மாநிலப் பொதுச் செயலாளர், காமராஜர் மக்கள் கட்சி.