காமராஜர் மக்கள் கட்சியின் பெண்ணே பேராற்றல் மகளிர் அணி பயிற்சிப் பாசறையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
திருச்சியில் 05 11 23 அன்று நடைபெற்ற காமராஜர் மக்கள் கட்சியின் மகளிர் அணி பயிற்சிப் பாசறையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
- மகளிர் தொகுதி இட ஒதுக்கீடு மசோதா:
1996இல் தொடங்கிய இந்த மசோதாவின் பயணம், தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது. அதற்கு திரு மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு காமராஜர் மக்கள் கட்சி மகளிர் அணி, தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. அதனை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, செயல்படுத்த வேண்டும். மகளிர் தொகுதி இட ஒதுக்கீட்டின் மூலமாக பட்டியல் இன, பழங்குடியி இன, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இன மகளிர் பயன்பெறும் வகையில் சீரமைப்பு செய்து, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் செயல் வடிவம் கொடுத்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சியின் மகளிர் அணி கேட்டுக் கொள்கிறது.
- டாஸ்மாக் கடைகளை மூடிடுக:
அனைத்துக் குற்றங்களுக்கும் ஊற்றுக் கண்ணாக, ஆரம்பப் புள்ளியாக மதுப் பழக்கம் உள்ளது. அத்தகைய மதுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. 2016 சட்டமன்றத் தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு தான் என்று தேர்தல் அறிக்கையில் பதிவு செய்ததோடு திரும்பத் திரும்ப தன்னுடைய பரப்புரையிலும் வலியுறுத்தினார், இன்றைய முதல்வர். ஆனால் 2021 தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு பற்றிய உறுதிமொழி இடம் பெறவில்லை. பெண்களின் வாக்குகளைப் பெறுவதற்காக 2016 சட்டமன்றத் தேர்தலின் போது மதுவிலக்கை வற்புறுத்திய திமுகழகம் 2021 இல் அதை முற்றாக மறந்துவிட்டது. மாநிலம் முழுவதும் போதைக் கலாச்சாரத்தின் முற்றுகையில் சிக்கித் தவிக்கும் மக்கள் நலனில் உண்மையான நாட்டம் இருந்தால், தமிழக அரசு மதுவிலக்கை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சியின் மகளிர் அணி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
- தமிழக அரசின் தலையாய கடமை:
ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை. வேங்கைவயல் தொடங்கி திருநெல்வேலி வரை தலித் மக்கள் பாதிக்கப்படுதல் என்பது தொடர்கதையாக உள்ளது. சாதிகள் அற்ற சமுதாயமே திராவிட இயக்கத்தின் குறிக்கோள் என்று பேசப்பட்ட நிலையில், ஆதிக்க சாதி மக்களால் பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகளுக்கு எதிராக தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளில் இதுவரை ஈடுபடவில்லை. ஆதிக்க சாதிகளின் ஆணவ நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இனியாவது அரசின் செயல்பாடுகள் அமைய வேண்டும். இது திராவிட மாடல் அரசு, இது திராவிட மண் என்ற வெற்று முழக்கங்களால் எந்தப் பயனும் இல்லை என்று காமராஜர் மக்கள் கட்சியின் மகளிர் அணி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
- மகளிரை மதித்திடுக:
மகளிருக்கு உதவித் தொகை அல்ல, அது உரிமைத் தொகை என்று அனைத்து குடும்பங்களிலும் உள்ள மகளிருக்கு வாக்களித்துவிட்டு, இன்று பல்வேறு தரவுகளைப் புகுத்தி பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதத்தில் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. உரிமைத் தொகையைப் பெறாத ஏறக்குறைய ஒரு கோடிக்கு அதிகமான பெண் மக்கள் அதை மறக்கப் போவதில்லை. வாக்கு தவறிய அரசுக்கு எதிரான தங்கள் எதிர்வினையை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடியில் அவர்கள் பதிவு செய்வார்கள் என்பதை காமராஜர் மக்கள் கட்சியின் மகளிர் அணி சுட்டிக் காட்ட விரும்புகிறது.
அன்புடன்
திருமதி வள்ளி இரமேஷ்
மாநிலத் தலைவர் – மகளிர் அணி – காமராஜர் மக்கள் கட்சி