தீண்டாமை இன்னும் தொடர்வது தமிழ்நாட்டிற்குத் தலைக்குனிவு!
தீண்டாமை இன்னும் தொடர்வது தமிழ்நாட்டிற்குத் தலைக்குனிவு!
‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற மனித நேயமிக்க பாடலை உலகிற்கு அளித்த கணியன் பூங்குன்றன், இன்றைய தமிழ்ச் சமூகத்தை நினைந்து வெட்கி வேதனை படக்கூடிய வகையில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகளைக் கலந்து உள்ளனர். அதை அறியாத ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்கள் அந்தக் குடிநீரைப் பயன்படுத்தி உள்ளனர்; உடல் அளவிலும், உள்ள அளவிலும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர்.
இந்தப் படுபாதகச் செயல் நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. இத்தகைய இழி செயல்களுக்குக் காரணமானவர்கள், இன்னும் அடையாளம் காணப்படவில்லை. துப்பு அறிவதில் புகழ் பெற்ற தமிழகக் காவல்துறை, இந்த விஷயத்தில் குற்றவாளிகளைக் கண்டறிவதில் தடுமாறுவதைப் பார்க்கும் போது, வாக்கு வங்கி அரசியலை முன் வைத்து அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து, சட்டத்தின் முன்னிறுத்தி தகுந்த தண்டனையைப் பெற்றுத் தருவதற்கு, தமிழக அரசு மேலும் காலம் தாழ்த்தாது, விரைவாக செயற்பட வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்த வேளையிலும், மனித உரிமைகள் ஆணையம் உட்பட பல தேசிய ஆணையங்கள் இருந்தும், மனித உரிமைகளை காக்க இன்னும் போராடிக் கொண்டே இருக்கிறோம். தன் வாழ்நாளின் பெரும் பகுதியை தீண்டாமையை எதிர்த்துப் போராட செலவு செய்த அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாள் இப்போது தான் கடந்து போயிருக்கிறது. அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் சம்பிரதாயங்கள் நடந்தேறி இருக்கின்றன. ஆனாலும், தீண்டாமை எனும் வன்மம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
வேங்கைவயல் கிராமத்தில் அனைத்து மக்களும் பொதுக் கோவிலுக்குச் செல்வது, இரட்டைக் குவளை ஒழிப்பு முறை என்று பிரச்சனைகளைத் தீர்க்க அரசு முற்பட்டாலும், மையப் பிரச்சினையான குடிநீரில் மனிதக் கழிவுகளைக் கலந்த, கயவர்களைக் கைது செய்யக் காட்டக் கூடியத் தயக்கம் ஏற்கக் கூடியது அல்ல. மனித குலத்துக்கே தலைக் குனிவை ஏற்படுத்திய அந்த மனித மிருகங்களை விரைவில் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசை காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
அன்புடன்
பா குமரய்யா
மாநிலப் பொதுச் செயலாளர்,
காமராஜர் மக்கள் கட்சி