எப்போது மதுவிலக்குக் கொண்டு வரப்போகிறீர்கள்..?
எப்போது மதுவிலக்குக் கொண்டு வரப்போகிறீர்கள்..?
“குடி கெடுக்கும் குடியை, மதுபானங்களை ஏகபோகமாக விற்கும், அறமற்ற பெருவணிகராக இருக்கிறது அரசு. மது விற்பனை மூலம் அரசு பெரும் வருமானத்தை ஈட்டுகிறது. டாஸ்மாக் கடைகள் தமிழகமெங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. இயற்கைப் புகையிலை விற்பனைத் தடை வழக்கில், மக்களின் ஊட்டச்சத்தினை உயர்த்திட வேண்டும், பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகின்ற அரசியல் சாசன சட்டப்பிரிவு 47ஐ மேற்கோள் காட்டும் தமிழக அரசு, அந்தப் பிரிவை முழுமையாகப் பின்பற்றி இருந்தால் பெருமிதம் அடைந்திருப்போம். துரதிஷ்டவசமாக அவ்வாறு நடைபெறவில்லை. மது பானங்களை ஏகபோகமாக விற்பனை செய்து கொண்டு, சட்டப் பிரிவு 47ப் பற்றித் தமிழக அரசு பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது”
மேலே குறிப்பிட்டு உள்ள அனைத்தையும், நாம் கூறவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், இயற்கைப் புகையிலை பயன்பாடு விற்பனைத் தடை வழக்கில், கடந்த 28ஆம் தேதி, நீதியரசர் அவர்கள் எடுத்து வைத்த கருத்துகள், அவை. இப்படி எத்தனையோ அரசியல் கட்சிகள், பொதுநல இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் எடுத்துரைத்தாலும், இடித்துரைத்தாலும் தமிழக அரசு, அலட்சியம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பாக, கடந்த ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி அனிதா சுமந்த், தமிழக அரசு டாஸ்மாக் மூலம் மதுவிற்பனையை துவங்கிய பின், இதுவரை, 5358 மதுபான கடைகள் இயங்கி வருவதாகவும், இந்த கடைகள் மூலம் விற்பனையை ஒழுங்குபடுத்த மட்டுமே பல்வேறு விதிகளையும், உத்தரவுகளையும் அரசு பிறப்பித்து வருவதாகவும் உத்தரவில் சுட்டிக் காட்டியுள்ளார்.
டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கைகளைப் படிப்படியாகக் குறைப்பது, விற்பனை நேரத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது, டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மது அருந்தும் கூடங்களை நிரந்தரமாக மூடுவது, தமிழக அரசின் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிப்பது, பெரும் குடிகாரர்களை குடி நோயிலிருந்து மீட்டெடுப்பது என்பது போன்ற செயல் திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலம் முழுமையான மதுவிலக்கை நோக்கி நாம் நடை போட முடியும்.
2016 இல் மதுவிலக்கு முதல் கையெழுத்து என்று கூறிவிட்டு 2021 அதைப் பற்றி பேசுவதையே முழுமையாக மறந்து விட்டு, மதுவிலக்கைப் பற்றி வினாக்கள், எழுப்பினால், நழுவிச் செல்வது, ஏன்? பண்டிகைக் காலங்களில் மது விற்பனையால் கோடி, கோடியாய் கொட்டும் வருமானம், தமிழக அரசுக்கு அவமானமே. குடியால் குழந்தைகளின் உணவு, கல்வி, எதிர்காலம் பறிக்கப்படுகின்றன.
தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், பூரண மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் தமது நோக்கம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதை செயல்படுத்துவதற்காக நேரம் வந்து விட்டது. எனவே, இனியும் தாமதிக்காமல் மதுவிலக்கை செயல்படுத்துவதற்கான கால அட்டவணையை அரசு அறிவிக்க வேண்டும். எப்போது மதுவிலக்கு கொண்டு வருவீர்கள் எனத் திட்டவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
அன்புடன்,
பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர்,
காமராஜர் மக்கள் கட்சி