அரசுப் பள்ளிகளில் தமிழ், ஒரு மொழிப் பாடமாகவாது இருக்காதா?

அரசுப் பள்ளிகளில் தமிழ்ஒரு மொழிப் பாடமாகவாது இருக்காதா?

அண்மையில், தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின் போது பேசிய மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு வரக்கூடாதா? என்று வினவி இருக்கிறார். கேந்திரிய வித்யாலயா பள்ளி, மத்திய அரசு ஊழியர்கள் மாநிலங்களுக்கு இடையில் பணி மாறுகின்ற பொழுது அவர்களின் குழந்தைகள் படிப்பு, ஒரே கல்வித் திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்டது. அமைச்சர் அவர்களுக்கு, இந்தத் தகவல் தெரியாது இருக்க வாய்ப்பு இல்லை என்றே நம்புகிறோம்.

அடுத்தது, கழகத்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் ஒரு மொழிப் பாடமாகவாவது தமிழைக் கொண்டு வர வேண்டும் என்று கழகத் தலைமையிடம் மெதுவாக தங்கம் தென்னரசு வலியுறுத்துவாரா? அதுகூட வேண்டாம், அரசுப் பள்ளிகளில் தமிழ் சொல்லிக் கொடுங்கள் என கல்வி அமைச்சரிடமாவது எடுத்து உரைப்பாரா? 

சில மாதங்களுக்கு முன் வந்த இந்த செய்தியினையும், அமைச்சர் தங்கம் தென்னரசு அறிந்திருப்பார் என எண்ணுகிறோம். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி தொடங்கி 12ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்து வருகின்றது. அவ்வாறு உள்ள பள்ளிகளில் தமிழும் பயிற்று மொழியாக வகுப்புகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி, சிவகங்கை, கடலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக மாற்றப்பட்டு, தமிழ் வகுப்புகள் இல்லை என்ற நிலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ‘தமிழ் வகுப்புகளே இல்லை என்பது தவறானது. தமிழ் வழி வகுப்புகளை ஒரு மாணவர் கூடத் தேர்ந்து எடுக்கவில்லை. அது குறித்து விசாரிக்கக் கூறியுள்ளோம். விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூறியுள்ளோம்” என்று தெரிவித்தார். இப்போது அதன் நிலை என்னவென்று தெரியவில்லை. தமிழகத்திலுள்ள அரசு, மாநகராட்சி, தனியார் (அது எந்தக் கல்விமுறைப் பள்ளியாக இருந்தாலும் சரி) பள்ளிகளில் தமிழ்ப் பாடம் இருக்கவேண்டும்; அவ்வாறு பயிற்றுவிக்காத பள்ளிகளின் அனுமதியை அரசு ரத்து செய்யவேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை வைக்கிறது.

அன்புடன்,

பா குமரய்யா, 

மாநிலப் பொதுச் செயலாளர், 

காமராஜர் மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *