கலைந்து போன கால் பந்தாட்டக் கனவு

கலைந்து போன கால் பந்தாட்டக் கனவு

வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகி இருந்ததற்காக, சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்ற கால் பந்தாட்ட இளம் வீராங்கனை பிரியா, கால் வீக்கம், வலி காரணமாக சென்னை இராஜீவ் காந்தி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், கால் பந்தாட்ட விளையாட்டுக்கு அவசியமான அவரது வலது கால் அகற்றப்பட்டது. ஆயினும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து உள்ளார். 

“நான் மீண்டு வருவேன்” என்று நம்பிக்கையோடு புலனத்தில் பதிவிட்டிருந்த பிரியா, தனது பெற்றோரை, உறவினர்களை, நண்பர்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு மறைந்து விட்டார்.  அவர்களின் துக்கத்தில் காமராஜர் மக்கள் கட்சியும் பங்கெடுத்துக் கொள்கிறது. பத்து லட்ச ரூபாய் நிதி உதவி (அரசின் கண்களுக்கு, அந்த இளம் உயிரின் மதிப்பு அவ்வளவுதான் போலும்), அவரது சகோதரர் ஒருவருக்கு அரசு வேலை, பணியில் கவனக் குறைவாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை என்று காட்சிகள் தொடர்கின்றன. அண்மையில் தான் ஜூனியர் விகடன் இதழ், தமிழ்நாடு மருத்துவமனை அவலங்கள் என்று ஒரு கட்டுரை வெளியிட்டது. அந்தக் கட்டுரையை அச்சடித்த மையின் ஈரம் காய்வதற்கு முன்பே, தலைநகரிலேயே இந்தத் துயர நிகழ்வு நடந்துள்ளது.

கடந்த செவ்வாய் அன்று, சுகாதார மாநாடு 2022ஐத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளை, அடிக்கடி தணிக்கை செய்து குறைகளைக் களைய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். முதல்வரின் இந்த அறிவுரையை, கால் பந்தாட்ட வீராங்கனை பிரியா முதலில் சிகிச்சை பெற்ற, முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் இருந்து தொடங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்பதை காமராஜர் மக்கள் கட்சி சுட்டிக் காட்ட விரும்புகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய, நலிவடைந்த மக்கள், மருத்துவம், கல்வி, போக்குவரத்து போன்ற அரசின் சேவைத் துறைகளை அணுகும் போது, அவர்களை உரிய அக்கறையுடன் அணுக வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

அன்புடன்

பா குமரய்யா,

மாநிலப் பொதுச் செயலாளர்

காமராஜர் மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *