காமராஜர் மக்கள் கட்சியின் ஐம்பெரும் விழாவில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

நேற்று 27 11 22 ஞாயிற்றுக்கிழமை, கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற காமராஜர் மக்கள் கட்சியின் ஐம்பெரும் விழாவில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இங்கே தந்திருக்கின்றோம். அவற்றைத் தங்கள் ஊடகத்தில் வெளியிட வேண்டுமாய் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம். 

1. கனிம வளக் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்துக

ஆற்றுப் படுகைகளில் சாலைகள் அமைத்து, மணல் கொள்ளை பாலாறு, தாமிரபரணி, அமராவதி, காவிரி, தென்பெண்ணை என்று தமிழகத்தின் அனைத்து ஆற்றுப் படுகைகளிலும் தொடர்கிறது. அரசு அனுமதித்த அளவைவிட அதிகமாக, இயந்திரங்களின் துணை கொண்டு சுரண்டுதல், ஆட்சி, அதிகார மையங்களின் துணையோடு அமோகமாக நடைபெற்று வருகிறது; அரசு நிர்ணயிக்கும் விலையை விட வெளிச்சந்தையில் பல மடங்கு விலைக்கு விற்கப்படுகிறது. கல் குவாரிகளை எடுத்துக் கொண்டாலும், அனுமதிக்கப்பட்ட பகுதிகளைத் தாண்டி வெட்டிக் குவிக்கும் போக்கு தொடர்கிறது. குமரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடந்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களே இதற்கு சாட்சி. மண்ணும், கல்லும் அண்டை மாநிலங்களுக்கு, அருகமை நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. இந்தக் கடத்தல்களுக்கு, கடுமையான நடவடிக்கைகள் மூலம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசே, கனிம வளங்களை வெட்டி எடுத்தல், விநியோகித்தல் என்று அனைத்து நிலைகளையும் கையில் எடுக்க வேண்டும். இதன் மூலம் ஊழலுக்கு உற்சவம் நடத்துவோரை செயலிழக்கச் செய்வதுடன், மக்களின் உண்மையான தேவைகளுக்கு நியாயமான விலையில் மணல் ஜல்லி போன்றவை கிடைக்கும். மதுக்கடைகளையே நடத்தும் அரசு, மணல் குவாரிகளையும் கல்குவாரிகளையும் பொறுப்பேற்று நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்று காமராஜர் மக்கள் கட்சி சுட்டிக் காட்ட விரும்புகிறது.

2.மதுக்கடைகளை முற்றாக மூடும் செயல் திட்டத்தை அறிவித்திடுக

“2016ல் ஆட்சி அமைந்தவுடன் மது விலக்கை நடைமுறைப்படுத்த முதல் கையெழுத்து இடப்படும்”  என்று அந்நாள் எதிர்க்கட்சித் தலைவர், இந்நாள் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். ஆனால் ஆட்சியில் அமர்ந்து, ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னும் மதுவிலக்கு விஷயத்தில் அமைதி காத்து வருகிறார். பாலியல் பிறழ்வுகள், கொலை, கொள்ளை போன்ற எண்ணற்ற குற்றங்களின் தாயாக, ஊற்றுக்கண்ணாக இருக்கும் குடிப் பழக்கத்தை வளர்த்தெடுக்கும் மது வணிகத்தை, அரசே முனைப்போடு நடத்தி வருவது வேதனையாக உள்ளது. மதுக் கடைகளை முற்றாக மூடினால் ஒழிய, தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைய வாய்ப்பே இல்லை. மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியைத் தருவதாக முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து கூறி வருவது உண்மை என்றால், மதுக்கடைகளை முற்றாக மூடுவதற்கான வழிவகைகளை, செயல் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.  …1/3

3. விலை உயர்வால், விழி பிதுங்கி நிற்கும் மக்கள்

பால் விலை, மின் கட்டணம், எரிபொருள் உருளை விலை, பெட்ரோல், டீசல் விலை, சொத்து வரி, குடிநீர் வடிகால் சேவை வரி என்று எல்லாக் கட்டணங்களும் ஏறுமுகத்தில் இருக்கின்றன. மக்களை வாட்டுவதில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் வேறுபாடு இல்லை. வாக்கு அறுவடைக்காக வாரி வழங்கப்பட்ட வாக்குறுதிகள், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் வசதியாக மறக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்வது என்றால், மின் கட்டண வசூல் மாதம் ஒரு முறை செய்யப்படும் என்று வழங்கப்பட்ட வாக்குறுதி, இப்போது நிறைவேற்றப்படுவது சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது. இது போன்று, தற்காலிகப் பணியாளர்கள் நிரந்தரம், பழைய ஓய்வு ஊதியத் திட்டம், அரசு மருத்துவர்கள் ஊதிய முரண்பாடுகள், மகளிருக்கு நிதி உதவி என்று எண்ணற்ற வாக்குறுதிகள் வரிசை கட்டி காத்திருக்கின்றன. மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதைக் காமராஜர் மக்கள் கட்சி சுட்டிக் காட்ட விரும்புகிறது.

4. திருக்குறளை,தேசிய நூலாக அறிவித்திடுக

உலகப் பொதுமறையாம், திருக்குறள் மதம், சாதி, இனம், மொழி எல்லைகளைத் தாண்டி, அறம், பொருள்,இன்பம் என்ற முப்பிரிவுகளில் மனித குலம் மேன்மையுற வழிகாட்டுகிறது. “நான் மறுபிறவியில் தமிழனாகப் பிறந்து திருக்குறளை தெளிவாகக் கற்க விரும்புகிறேன்” என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார். பன்னாட்டு அரங்குகளில் உரையாற்றும் போது, பிரதமர் மோடி அவர்களும், திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றுகிறார். இதனை வாக்கு வங்கி அரசியலுக்காக பிரதமர் செய்யவில்லை என்பது உண்மையானால், அகிலமே போற்றும் சிறப்புகள் பல பெற்ற திருக்குறளை, இந்தியத் திருநாட்டின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

5. சத்துணவு முட்டை கொள்முதல் ஊழல் – அதே பாதையில் பயணிப்பது ஏன்?

2021 சட்டமன்றத் தேர்தலில், நாமக்கல் பிரச்சாரக் கூட்டத்தில், “சத்துணவு முட்டை கொள்முதலில் சந்தை விலையை விட அதிக விலைக்கு வாங்கியதால் 500 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்துள்ளது; இந்தப் பணம் அனைத்து மட்டங்களிலும் பங்கீடு செய்யப்படுகிறது.ஆட்சிக்கு வந்தவுடன் உடனே நடவடிக்கை” என்று பேசியவர் நமது முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள். இந்த விஷயத்தில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக எந்த நிறுவனத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டதோ, அவர்களுக்கே மீண்டும் கொள்முதல் ஆணைகள் தரப்படுகின்றன. கடந்த ஆண்டு பொங்கல் குளறுபடிகளுக்காக குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்திற்கும் முட்டை கொள்முதல் ஆணை தரப்பட்டுள்ளது. முட்டை கொள்முதலில் மட்டுமல்ல, கடந்த ஆட்சியில் எந்த நிறுவனங்கள் மீதெல்லாம் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதோ, அந்த நிறுவனங்களின் பினாமிகளே, இந்த ஆட்சியிலும் நெருக்கமாகப் பவனி வருகின்றன. பெருந்தலைவர் காமராஜர் கூறிய “ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்ற இலக்கணத்திற்கு ஊறு நேராமல், கழகங்கள் நடந்து கொள்கின்றன. முதல்வர் அவர்களுக்கு ஊழல்களை ஒழிப்பதில் உள்ளார்ந்த ஈடுபாடு இருக்கிறது என்பதை, கடந்த ஆட்சியின் மீது முன்வைத்த ஊழல் புகார்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளே நிரூபிக்கும் என்பதைக் காமராஜர் மக்கள் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.

.6,  சமூக நீதிக்கு என்ன பின்னடைவு?

பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என, உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள பெரும்பான்மைத் தீர்ப்பு குறிப்பிடுகிறது. இந்தத் தீர்ப்பு குறித்து, கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின், அவர்கள் “சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்திற்குப்     …2/3

பின்னடைவு” என்று தெரிவித்துள்ளார். எந்த அடிப்படையில் இது பின்னடைவு என்பது குறித்து முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.

சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் அடிப்படைத் தேவைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெற்று மாண்புடன் வாழ வழி அமைத்தல் சமூகநீதியின் முக்கியமான கூறுகளில் ஒன்று. ஒவ்வொருவருக்கும் சமூகத்திற்குள் தங்கள் உரிமைகளைத் தடையின்றிப் பயன்படுத்திக் கொள்வது தான் சமூக நீதி.

கடந்த காலங்களில் நிலவி வந்த சமனற்ற நிலையைச் சீர் செய்யவே அரசியலமைப்புச் சட்டம் மூலம் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே பயன்பெறும் பல்வேறு சமூகப் பிரிவுகளின் இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், பொருளாதார நிலையில் நலிவடைந்த பிரிவினருக்கான ஒதுக்கீடு, எந்த வகையில் சமூக நீதியை வலுவிழக்கச் செய்யும் என்பது புரியவில்லை.

இந்தப் பத்து சதவிகித இட ஒதுக்கீட்டில், உயர் சாதியினர் என்று சொல்லப்படுகின்ற பிராமணர்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள், ரெட்டியார்கள், நாயுடுக்கள், செட்டியார்கள் போன்ற பல்வேறு சாதிப் பிரிவினரும் பயன் பெறுகின்றனர். சமூகத்தில் பொருளாதாரரீதியாக வீழ்ந்து கிடப்போரைத் தூக்கி நிறுத்துதலும், அவர்களுக்கு உதவுதலும் கூடச் சமூகநீதியாகும். சமூக நீதி என்பது ஒரு சமூகத்தின் அனைத்து தரப்பினரையும், ஏற்றத்தாழ்வின்றி அரவணைத்துச் செல்வதும், வாழ வழி செய்வதும் ஆகும். எந்த விதமான பாகுபாடும் காட்டாமல், நலிவுற்ற நிலையில் உள்ள மக்கள் உயர்வு பெற உரிய வாய்ப்புகளையும், வழிகளையும் ஏற்படுத்தித் தருவதே சமூக நீதியாகும்.

நாட்டின் வளங்கள், வருமானம், வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுவதில் சமத்துவமும், பாரபட்சமின்மையும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்” என்று இந்திய அரசியலமைப்புச் சாசனம் வலியுறுத்துகிறது. ஒருவரின் பொருளாதார நிலை நிலையானது அல்ல; மாறும் தன்மை உடையது என்ற கூற்றையும் கருத்தில் கொண்டால், இந்தப் பிரிவில் இட ஒதுக்கீடு பெற்றோரின் நிலையை, மேம்பாட்டைச் சீராய்வு செய்யும் முறையைக் கொண்டு வரலாம். வருமான உச்சவரம்புத் தொகையை மறுபரிசீலனை செய்யலாம். அதனை விடுத்து ஒட்டுமொத்தமாக எதிர்ப்பது என்பது, சரியான நிலைப்பாடு அன்று.

சமூக அடையாளங்களை முன்னிறுத்தி ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது அநீதி. அதுவே சமத்துவமின்மைக்கு அடித்தளமாகிறது. இனம் மொழி, சாதி, பாலினம், மதம் போன்ற வேறுபாடுகள் இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் தங்களது தனித்துவமான திறமையினை முன்னெடுத்துச் சென்று வாழ்வில் வெற்றி பெறச் சம அளவில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எனவே, தமிழக முதல்வரும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, நலிவடைந்த பிரிவினர்களுக்கான 10 சதவிகித ஒதுக்கீட்டை வரவேற்க வேண்டும்; தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

அன்புடன்

பா குமரய்யா,

மாநிலப் பொதுச் செயலாளர் – காமராஜர் மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *