கோபியில் கூடியது காமராஜர் மக்கள் கட்சியின் சங்கமம்

காமராஜர் மக்கள் கட்சியின் ஐம்பெரும் விழா, மேற்கு மண்டல இளைஞர் அணி ஒருங்கிணைப்புடன் நேற்று 27 11 2022 அன்று கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் கலந்து கொண்டு “இன்றைய தேவை, காமராஜர் மக்கள் கட்சி’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். “காமராஜர் மக்கள் கட்சி, வெறுப்பு அரசியலை விடுத்து, தமிழக மக்களை ஒருங்கிணைக்கின்ற நல் அரசியலை முன்னெடுத்துச் செல்லும்; ஊழலின் நிழல் படியாத, மக்களின் நலன் சார்ந்த, பெருந்தலைவரின் பொற்கால ஆட்சியை மீட்டெடுக்கும் வேள்வியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளும்” என்று குறிப்பிட்டார். 

கட்சிக் கொடி ஏற்றுதல், பயிலரங்கம், பட்டிமன்றம், செயல்த் திட்டங்களை வகுத்திடக் கலந்துரையாடல், மகளிர் அணி கலை நிகழ்ச்சிகள் என்று நாள் முழுவதும் நடந்த இந்த விழாவில் மாநிலத் துணைத் தலைவர்கள் டாக்டர் டென்னிஸ், ஒகே டெக்ஸ் கந்தசாமி, மாநிலப் பொதுச் செயலாளர் பா குமரய்யா மாநிலப் பொருளாளர் திரு பொன் கோவிந்தராஜ், மாநிலச் செயலாளர்கள் திரு சுப்பிரமணிய பாரதி, திரு கிறிஸ்டி, திரு சீ கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞர் அணித் தலைவர் திரு ஜீவா தங்கவேல், மாநில மகளிர் அணித் தலைவர் திருமதி வள்ளி ரமேஷ், மாநிலத் தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் திரு வே சாந்தமூர்த்தி,  இளைஞர் அணியின் மேற்கு மண்டலத் தலைவர் திரு விஜயராகவன், பொருளாளர் கார்த்திகேய முத்துக்குமார் மாவட்டத் தலைவர்கள், தொகுதித் தலைவர்கள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கனிம வளக் கொள்ளைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மதுக்கடைகளை முற்றாக மூடுவதற்கான செயல் திட்டத்தை அறிவிக்கக் கோரி, சட்டமன்றத் தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளான மாதம் ஒரு முறை மின் கட்டண வசூல், மகளிருக்கு நிதி உதவி, தற்காலிகப் பணியில் இருக்கும் அரசு ஊழியர்களை நிரந்தரம் செய்தல், அரசு மருத்துவர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைதல், உலகப் பொதுமறையாம் திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தல், சத்துணவு முட்டை கொள்முதல் உட்பட பல்வேறு துறைகளில் நடைபெறும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துதல், அதில் உள்ள முரண்பாடுகளைக் களைய நடவடிக்கைகள் எடுத்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த செய்தியை தங்கள் ஊடகத்தில் வெளியிடுமாறு தங்களை அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

மிக்க நன்றி

பா குமரய்யா,

மாநிலப் பொதுச் செயலாளர்

காமராஜர் மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *