எம்ஜிஆர் அவர்களின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்!!
எம்ஜிஆர் அவர்களின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் யாரும் எதிர்பாராத நிலையில் இடைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆட்சியில் அமர்ந்திருக்கும் தி.மு.க, மக்களின் பேராதரவு கழக ஆட்சிக்குத்தான் அப்படியே நீடிக்கிறது என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்காகத் திமுக தன் வசமிருக்கும் ஆட்சி அதிகாரத்தையும், குவிந்து கிடக்கும் எல்லையற்ற பணத்தையும் பயன்படுத்தி எல்லா வகையிலும் வெற்றிக் கனியைப் பறிப்பதற்கு முயன்று பார்க்கும். ஆளுங்கட்சியின் அமைச்சர் பெருமக்கள் இப்போதே களத்தில் இறங்கிவிட்டனர்.
இந்த நிலையில் இரண்டுபட்டுக் கிடக்கும் அஇஅதிமுக, வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லாத சூழல்தான் நிலவுகிறது. கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி, மனித உழைப்பை விரயமாக்கி, வெறுப்பு அரசியலை வளர்த்தெடுத்து, தொகுதியில் அமைதியின்மையை உருவாக்கி ஓர் அவசியமற்ற இடைத் தேர்தலில் கட்சிகள் ஈடுபட வேண்டுமா என்று அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். திருப்பத்தூர் இடைத்தேர்தல் நடந்த போது எம்.ஜி.ஆர். அவர்கள், ஓர் ஆரோக்கியமான அரசியல் பரிந்துரையை முன்வைத்தார். எதிர்பாராத நிலையில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் மரணம் அடைந்தால், அவர் சார்ந்திருந்த கட்சி அறிவிக்கும் மனிதரையே எஞ்சிய காலத்திற்கு அந்தப் பதவியை அனுபவிக்க அனுமதிப்பதன் மூலம் தேவையற்ற இடைத்தேர்தலைத் தவிர்த்துவிடலாம் என்று அவர் முன்வைத்த பரிந்துரை அன்று நிராகரிக்கப்பட்டது.
மக்கள் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்து பணியாற்ற வேண்டும் என்றுதான் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கின்றனர். அப்படித் தேர்ந்தெடுக்கப் பட்டவர் மரணமடைந்தால் மக்கள் வெற்றி பெறச் செய்த கட்சி அறிவிக்கும் வேட்பாளரைப் போட்டியின்றித் தேர்ந்தெடுப்பதே ஜனநாயகத்தின் நல்லடையாளமாக அமையும். எம்ஜியாரின் பரிந்துரையை ஏற்பதன் மூலம் அஇஅதிமுக பல்வேறு சங்கடங்களிலிருந்து விடுபடக்கூடும். அனைத்து அரசியல் கட்சிகளும் அன்று எம்ஜியார் முன்வைத்த பரிந்துரையை இன்று செயற்படுத்துவதன் மூலம் நிரந்தரமாக இடைத்தேர்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
தான் இருக்கும் போது தன் மகனை இளம் வயதில் பறி கொடுப்பதை விட ஓர் ஆற்றமுடியாத துயரம் வேறொன்றும் ஒருவருக்கு இருக்க முடியாது. நண்பர் இளங்கோவனுக்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி ஒரு வகையில் ஆறுதலாக அமையட்டும். இடைத்தேர்தல்களே இல்லாத நிலையை அனைத்து அரசியல் கட்சிகளும் உருவாக்கட்டும். இன்று இளங்கோவனுக்குக் கிடைக்கும் நற்பலன், நாளை எல்லாக் கட்சிகளுக்கும் வாய்க்கட்டும். எம்ஜியாரைக் கொடியில் வைத்திருக்கும் அஇஅதிமுகவிடம் இருந்து இந்த நல்ல தொடக்கம் உருவாகட்டும். பலநூறு கோடி ரூபாய் இந்த இடைத்தேர்தலில் பாழாவது தவிர்க்கப்படட்டும்.
அன்புடன்,
தமிழருவி மணியன்