காமராஜர் மக்கள் கட்சி  – கோவை கூட்டத் தீர்மானங்கள்

1. ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே உள்ள கருத்து மோதல்கள்!

தமிழகம்,  தமிழ்நாடு என்ற சொல்லாடல்களை வைத்துக்கொண்டு ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே உருவாக்கப்பட்ட பிரச்சனை வருத்தத்துக்குரியது. தமிழ்நாடு என்ற சொல்லை முற்றாகப் புறக்கணித்துவிட்டு இனிவரும் காலங்களில் தமிழகம் என்று தான் சொல்ல வேண்டும் என்று ஆளுநர் குறிப்பிடவில்லை. தமிழகம், தமிழ்நாடு என்ற இரண்டு சொற்களும் அரசின் சார்பில் நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் பல்வேறு எரியும் பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை மாற்றும் திட்டமிட்ட முயற்சியாகவே, ஆளுநருக்கு எதிரான மரபு மீறிய வார்த்தைப் பிரயோகங்களும், நாகரிகத்திற்குப் புறம்பான நடைமுறைகளும் செயல்படுத்தப்பட்டதாக காமராஜர் மக்கள் கட்சி கருதுகின்றது.

சட்டப்பேரவையில் ஆளுநர் வாசித்த அறிக்கையில், தமிழக அரசு விரும்பாத சில செய்திகள் இருந்தால் அவற்றைப் பற்றி முதல்வரும், திமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது நாகரிகமாகம் வெளிப்படுத்தி இருக்கலாம். ஆனால், ஆளுநர் உரையைத் தொடங்கும் போது அவரை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பியதும், அவரை வைத்துக் கொண்டு அவருக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதும், அவர் வெளிநடப்பு செய்யும் நேரத்தில் உயர் கல்வி அமைச்சர் மோசமான முறையில் சைகை காட்டுவதும், ஆளுநருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டுவதும், ஆளுநர் பற்றி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ் பாரதி முதற்கொண்டு திமுகவின் மேடைப் பேச்சாளர்கள் வரை கீழ்த்தரமாக மேடைகளில் முழங்குவதும்  கண்டனத்திற்குரியது.

ஆளுநர் அவர்கள், தமிழக அரசின் நிர்வாக நடைமுறைகளில் ஏற்படும் தவறுகளை கண்காணிப்பதுடன், அரசுத் துறைகளில் அரங்கேறும் அன்றாட ஊழல்கள் குறித்து முறையான  நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்  தன்னுடைய  முழுக் கவனத்தையும் செலுத்தினால், தமிழகத்திற்கு நலன் பயப்பதாக இருக்கும். ஆளுநர் அவ்வப்போது வெளிப்படுத்தும் கருத்துகளைப் பயன்படுத்தி    மக்களின் மன உணர்வுகளை கொதி நிலையில் வைத்து இருப்பதின் மூலம் திமுக அரசு, தன்னுடைய தவறுகளை திரையிட்டு மூடப் பார்க்கின்றது என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். அரசின் தலைமகனாக அமர்ந்திருக்கும் ஆளுநருக்கு உரிய மரியாதையை அரசு வழங்குவதும் மக்களால்  தேர்ந்து  எடுக்கப்பட்ட அரசோடு ஆளுநர் இணக்கமான  சூழலை வளர்த்தெடுப்பதும் இன்றைய ஜனநாயகத் தேவை என்று காமராஜர் மக்கள் கட்சி கருதுகின்றது.

2. மதுக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

தமிழகம் போதைக் கலாச்சாரத்தில் இருந்து முற்றாக விடுபட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம் என்ற முதல்வர் மு க ஸ்டாலின் வாக்குமூலம்,  ‘ படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்’ என்கிற பழமொழியை நினைவுபடுத்துகிறது. போதைக் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்று முழங்கும் முதல்வர், டாஸ்மாக் கடைகள் விற்பனை செய்யும் மதுவை போதைப் பொருளாக நினைந்து பார்க்காதது, ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருகின்றது. ஊரெங்கும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து,  மக்களை முடிந்தவரை மதுவின் மயக்கத்தில் ஆழ்த்தி, அவர்களுடைய சட்டைப் பையில் இருக்கும் பணத்தைச் சூறையாடி, ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாயை அரசின் வருவாயாக உயர்த்தி, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு கெடுவதற்கும், பாலியல் குற்றங்கள் வளர்வதற்கும், கொலை, கொள்ளை பெருகுவதற்கும் வழி அமைத்துக் கொடுத்துவிட்டு, தமிழகம் போதைக் கலாச்சாரம் அறவே இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்று முதல்வர் சொல்வது எந்த வகையில் சாத்தியமாகும்?

உண்மையிலேயே தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும்,  சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தவும்,  அமைதி தவழும் மாநிலமாகத் தமிழகத்தை மாற்ற விரும்பினால், மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதிலும், மது விற்பனை நேரத்தை அடுத்தடுத்து குறைப்பதிலும், மது அருந்துவதற்கு உரிமம் தேவை என்ற நடைமுறையைக் கொண்டு வருவதும் செய்யப்பட வேண்டும். கலைஞரால் கொண்டு வரப்பட்ட மதுக் கலாச்சாரத்திற்கு அவருடைய திருமகன், முதல்வர் ஸ்டாலின் முற்றுப் புள்ளி வைத்தார் என்ற வரலாற்றுப் பெருமையை நம்முடைய முதல்வர் பெற வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.   

3. தீண்டாமை இன்னும் தொடர்வது தமிழ்நாட்டிற்குத் தலைக்குனிவு!

‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற மனித நேயமிக்க  பாடலைத் தந்த கணியன் பூங்குன்றன், இன்றைய தமிழ்ச் சமூகத்தை நினைந்து வெட்கி வேதனை படக்கூடிய வகையில், அண்ணல் காந்தியடிகள், அம்பேத்கர், பெரியார் போன்ற பெருமக்கள் தங்களின் போராட்டங்கள், முன்னெடுப்புகள் விழலுக்கு இறைத்த நீராகி விட்டதே என்று வருந்தக் கூடிய நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாயல் கிராமத்தில், குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட கொடுமை நடந்தேறி இருக்கின்றது.  இத்தகைய இழிசெயல்களுக்குக் காரணமானவர்கள், இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர்களை விரைவில் கண்டுபிடித்து, சட்டத்தின் முன்னிறுத்தி தகுந்த தண்டனையைப் பெற்றுத் தருவதற்கு, தமிழக அரசு காலம் தாழ்த்தாது செயல்பட வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

4. காப்புக் காடுகளைக் காத்திடுக! கனிம வளக் கொள்ளைகளைத் தடுத்திடுக!!

வரம்பு மீறி, மலைப்பகுதிகள், ஆற்றுப் படுகைகள் என்று அனைத்துப் பகுதிகளிலும் கனிம வளக் கொள்ளை நின்ற பாடில்லை. ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்கள் இயற்கை வளங்களைச் சூறையாடத் தடை விதித்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் இதற்குத் தடை ஏதும் இல்லை. மேலும், தற்போது காப்புக் காடுகளைச் சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் கல்குவாரிகள் மற்றும் சுரங்கங்கள் அமைக்க விதிக்கப்பட்டு இருந்தத் தடையை நீக்கித் தமிழக அரசின் தொழில்துறை ஆணை வெளியிட்டுள்ளது.  கடந்த 2021 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், காப்புக் காடுகளை ஒட்டி உள்ள பகுதிகளில் குவாரிகள், சுரங்கங்கள் அமைக்கத் தடை விதித்து, அரசு ஆணை  வெளியிட்டது.  இந்த ஆணையை நீக்கி, குவாரி உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்கவும், அரசுக்கு வருமானத்தைப் பெருக்கவும் முடிவு எடுத்துள்ளதாகத் தமிழக அரசு தற்போது கூறுகிறது.

இதன் மூலம், அரசுக்கு இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் மீது அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது. எனவே காப்புக் காடுகள் பாதுகாப்பு குறித்து அரசின் நவம்பர் மாதம் 2021 ஆண்டு நிலையே தொடர வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் கனிம வளங்கள், பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும்  என்றும், கனிம வளங்களைச் சுரண்டுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

5. ஊராட்சி உரிமைகள் – விழிப்புணர்வுப் பிரச்சாரம்; குடியரசு தினம் அன்று கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்பு!

மத்தியில் இருக்கும் அதிகாரங்கள், மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று வாதாடும் மாநில அரசுகள், தங்களிடமிருந்து அதிகாரத்தை ஊராட்சி அமைப்புகளுக்கு மடைமாற்றம் செய்யத் தயங்கும் சூழலே நிலவுகிறது. அதிகாரப் பரவலே அனைவரையும் வாழ வைக்கும். இந்த அடிப்படையில் ஊராட்சி உரிமைகள் பற்றிய விளக்கங்களை, காமராஜர் மக்கள் கட்சித் தொண்டர்கள் ஊராட்சித் தலைவர்களிடம் எடுத்துரைப்பார்கள். அதற்கான ஒரு கையேட்டையும் அவர்களிடம் அளிப்பார்கள். வருகின்ற குடியரசு நாளன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று கடந்த கால நிகழ்வுகளை சீராய்வு செய்வதுடன், எதிர்காலத் திட்டங்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளும் நல்குவார்கள். பொதுமக்களும் இந்த கிராம சபைக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

அன்புடன்

பா குமரய்யா,

மாநிலப் பொதுச் செயலாளர்,

காமராஜர் மக்கள் கட்சி,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *