கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் தேவையா?
மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களுக்கு ஏற்கனவே சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைந்துள்ள நிலையில், அது அவரது புகழைப் பரப்பிட போதாது என்று கருதியதாலோ என்னவோ, அவரது புதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, 137 அடி உயரப் பேனா ஒன்றை, 81 கோடி ரூபாய் செலவில், வங்கக் கடலுக்குள் 360 மீட்டர் தொலைவில் நிறுவிட முடிவு செய்துள்ளது. இந்த முடிவு சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கும், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வுத் தன்மையைக் கெடுக்கும் என்று பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
02/02/23 அன்று நடைபெற்ற விசாரணையில், இது திட்ட வடிவிலேயே உள்ளது, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி வரவில்லை என்று தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் கூறியுள்ளார். இதற்கிடையில் கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற கண்துடைப்பு நாடகம் 31/01/23 அன்று நடந்தேறியுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அரசுத் தரப்பிடம் இருந்து தெளிவான அறிக்கையோ, அறிவிப்புகளோ இல்லை. நாட்கள் நகர்ந்த பின் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டதாக அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை, இணைய வழி சூதாட்டம் போன்றவற்றுக்கு மக்களின் கருத்தறிய, இணைய வழியில் பதிவு செய்திட வாய்ப்பினைத் தந்தது போல், பேனா நினைவுச் சின்னத் திட்டத்திற்கும் கருத்துகளை முன்வைத்திட வாய்ப்பு தர வேண்டும். ஏனெனில் கருத்து கேட்புக் கூட்டம், ஒரு தெளிவற்ற சூழலில் முடிவடைந்ததால், இணைய வழியில் கருத்துப் பதிவு செய்திட வாய்ப்பு தருவது மிகவும் முக்கியமானது; அவசியமானது.
தமிழ்நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய வாழ்வாதாரப் பிரச்சினைகள் பல, நிதிப் பற்றாக்குறையினால் தடுமாறிக் கொண்டிருக்கும் போது, அரசு அலுவலர்களுக்கு மாத ஊதியம் வழங்குவதற்கு டாஸ்மாக் வருமானத்தையே நம்பி இருக்கிறோம் என்று அமைச்சர் பெருமக்கள் திருவாய் மலரும் சூழலில், மாநில அரசின் கடன் ஆறரை லட்சம் கோடிக்கு அதிகமாக இருக்கும் நிலையில், 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் தேவையற்ற ஒன்று. அப்படியே தமிழுக்கு கலைஞர் ஆற்றிய தொண்டைப் போற்றுவதற்காக நிறுவப்படுவதாக வைத்துக் கொண்டால், இந்த நினைவுச் சின்னத்திற்கு செலவிடப்படும் பணத்தை வறுமையில் வாடும் தமிழ் அறிஞர்களின் குடும்பங்களுக்கு நிதியாக வழங்கலாம். இதுவே தமிழுக்கு செய்யும் உண்மையான தொண்டாகவும், கலைஞர் புகழ் பாடுவதாகவும் அமையும்.
நினைவுச் சின்னம் நிறுவியே தீர வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டைத் தமிழ்நாடு அரசு எடுக்குமானால், அந்த நினைவுச் சின்னத்தை ஏற்கனவே 2.21 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்திலேயே அமைத்திடலாம். இதன் மூலம் சுற்றுச்சூழல் உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். மேலே எடுத்து வைக்கப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தையும் மனதில் கொண்டு, கடலுக்குள் பேனா நினைவுச் சின்னத்தை நிறுவும் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
அன்புடன்
பா குமரய்யா
மாநிலப் பொதுச் செயலாளர்,
காமராஜர் மக்கள் கட்சி