இணைய வழி சூதாட்டத்தைத் தடை செய்ய, இன்னும் தயக்கம் ஏன்?

தமிழகம் மாய வலையிலும், மயக்க வலையிலும் சிக்கி அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ‘விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு’ என்ற முழக்கத்துடன், அறிஞர் அண்ணா அவர்களால் துவக்கப்பட்ட லாட்டரிச் சீட்டு, பல குடும்பங்களின் வருமானத்தை சுருட்ட ஆரம்பித்தது. பின்னாளில் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தடை செய்யப்பட்டது. மதுவின் வாசனையே அறியாதிருந்த ஒரு தலைமுறை, அந்தக் கொடிய பழக்கத்திற்கு அடிமையாகிட ஆரம்பப் புள்ளி வைத்தவர் கலைஞர் கருணாநிதி என்றால், அந்த அலங்கோலத்தை வளர்த்தெடுத்தவர்கள் முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்களும் ஜெயலலிதா அவர்களும் ஆவார்கள். ‘நாங்கள் மதுக்கடைகளை மூடுவதாகச் சொல்லவில்லை’ என்று (அ)நியாயம் பேசிக்கொண்டு, மது விற்கும் மாபாவத்தைத் தொடர்கிறது, திரு மு க ஸ்டாலின் அரசு.

இந்த வரிசையில் இணைய வழி சூதாட்டம் இணைந்திருக்கிறது. இது தேசிய அளவிலான பிரச்சனை எனலாம். கடந்த இரு ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்டோர், சூதாட்டத்தில் பணத்தை இழந்து இறுதியில் தங்களையும் மாய்த்துக் கொண்டு உள்ளனர். அதிமுக ஆட்சியில் தொடர்ந்த சட்டப் போராட்டம், திமுக ஆட்சியிலும் தொடர்கிறது. திமுக அரசின் அவசரச் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்த தமிழக ஆளுநர், முறையான சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் காலம் தாழ்த்துவது, ஏற்புடையது அன்று.

தமிழ்நாட்டில் தடை கொண்டு வந்தாலும், இணைய வழி கட்டுப்பாட்டிற்கு வாய்ப்புகள் இல்லை என்று காரணங்கள் கூறப்படலாம். இந்த சூதாட்டத்தைத் தடை செய்யக்கோரி இதுவரை 19 மாநிலங்கள் தனித்தனியாக சட்டம் இயற்றியுள்ளன. இந்தியாவில், தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களும் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யும் சட்டங்களை இயற்றியிருக்கின்றன. சிக்கிம், நாகாலாந்து போன்ற மாநிலங்கள் அவற்றை முறைப்படுத்தி அனுமதிக்கும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. அனைத்து மாநிலங்களும் தடை விதிக்கக் கோரினால், நாடு தழுவிய அளவில் சட்டம் இயற்றப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்; இந்த அறிவிப்பு விந்தையாக உள்ளது.

மக்கள் நலனைக் காத்திட, மத்திய அரசு தானாகவே முன்வர வேண்டும். தொடர்ந்து தயக்கம் காட்டுவது, பலியாகும் உயிர்களின் எண்ணிக்கையைக் கூட்ட மட்டுமே உதவும். தேசிய அளவில் கால் பதிக்கும் கனவில் இருக்கும் தமிழக முதல்வர், அனைத்து மாநில முதல்வர்களையும் ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ‘மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல், வருமானத்தில் மட்டுமே கண்ணாயிருக்கும் அரசு, வேலைக் காட்டி, மிரட்டி வழிப்பறி செய்வோனுக்கு இணையானது’ என்கிறார் ஐயன் திருவள்ளுவர். போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் குறளை அமைக்கலாம்; திருக்குறள் பற்றி கூட்டங்களில் உயர்வாக எடுத்துரைக்கலாம்; வான்புகழ் வள்ளுவனுக்கு வானுயுர சிலைகள் வைக்கலாம். ஆனால் இவற்றையெல்லாம் விட, குறள் வழி நடப்பது அன்றோ, சிறப்பு!

30 சதவீதமும், அதற்கு மேலும் வரி வருமானம் வரும் என்பதால், மக்களை அழிக்கும் சூதாட்டங்களுக்கு அரசுகள் துணை நிற்பதும், நடப்பு விதிகளுக்கும், சட்டங்களுக்கு பின்னாலும் ஒளிந்து கொள்வது அறத்தின் பாற்பட்டதல்ல. நாடெங்கும் தற்கொலைக்குத் தள்ளப்படும் மக்களை மீட்டெடுக்க, வருமானம் வரும் என்ற மாய வலையை அறுத்தெறிந்து, இணைய வழி சூதாட்டத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது

வணக்கத்துடன்

பா குமரய்யா 

மாநிலப் பொதுச் செயலாளர்,  

காமராஜர் மக்கள் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *