இதுதான் திராவிட மாதிரியா?

இதுதான் திராவிட மாதிரியா?

போராடிப் பெற்ற உரிமையை, புறந்தள்ளி எதேச்சதிகாரமாக உத்தரவிட்டிருக்கிறது ஆளும் திமுக அரசு. மதுபானம் மூலம் வருமானம் பெருக்கி மக்கள் விரோத அரசாக தன்னை நிரூபித்தக் கொண்ட இந்த ஆட்சி, தொழிலாளர் விரோத அரசாகவும் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது.
1888ஆம் ஆண்டு ஹார்வி என்னும் ஆங்கிலேயர் தூத்துக்குடியில் தொடங்கிய கோரல் ஆலையில் 26000 தொழிலாளர்கள் பணியாற்றினர். மிகக் கூடுதல் லாபம் பெற்ற அந்த ஆலை, ஒரு நாளைக்குப் பதினான்கு மணி நேரம் அவர்களிடம் வேலை வாங்கியது. 1908 பிப்ரவரி 27 அன்று, அந்தத் தொழிலாளர்கள் அனைவரும் வேலை செய்ய முடியாது என்று கூறித் தெருவுக்கு வந்தனர். இதற்குப் பின்புலத்தில் வ.உ.சி, சிவா இருவரும்தான் உள்ளனர் என்ற கோபம் அரசுக்கு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் பிறகு கைது செய்யப்பட்டனர்.1918 ஏப்ரல் 27 ஆம் நாளன்று, தமிழகத்தில் முதன்முதலாக “சென்னைத் தொழிலாளர் சங்கம்” தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் தொழிற்சங்கமும் அதுதான். எனவே இந்தியத் தொழிலாளர் வரலாற்றில் இந்நாள் ஒரு மிக முதன்மையான நாள்.
இச்சங்கப் பொறுப்பாளர்கள் பட்டியலில் மும்பையைச் சேர்ந்த பி.பி.வாடியா தலைவராகவும், திரு.வி.க., கேசவன் பிள்ளை உள்ளிட்டோர் துணைத் தலைவர்களாகவும், செல்வபதி செட்டியார், இராமாஞ்சலு நாயுடு ஆகியோர் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வ.உ.சி, இராஜாஜி, எம்.சி.ராஜா, சக்கரை செட்டியார், டாக்டர் நடேசமுதலியார் கஸ்தூரி ரங்க அய்யங்கார் முதலான பலர் அச்சங்கத்திற்குத் துணை புரிந்துள்ளனர். தொழிற்சங்கத்தை உருவாக்கிய தலைவர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த, பல்வேறு சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்ட தலைவர்கள் ஒன்று கூடியிருப்பதைக் காண முடிகிறது. வாடியா, திருவிக இருவரும் ஹோம் ரூல் இயக்கத்தில் தங்கள் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர்கள். நடேசனார் நீதிக் கட்சியைத் தொடக்கியவர்களில் ஒருவர். வ.உ.சி காங்கிரஸ் கட்சியின் விடுதலைப் போராட்ட வீரர். எம்.சி ராஜா, ஆதி திராவிட மக்களின் தலைவர். கஸ்தூரி ரங்க ஐய்யங்கார் ‘இந்து’ ஏட்டின் நிறுவனர். இவ்வாறாகப் பலரும் ஒருங்கிணைந்து ஏற்படுத்திய சங்கம்தான் சென்னைத் தொழிலாளர் சங்கம். இவர்கள் போராடியது எட்டு மணி நேர வேலைக்காகவும், ஊதிய உயர்வுக்காகவும்தான் என்பதனை மறந்து விடக்கூடாது.
எந்த நோக்கத்துக்காகப் போராடி, உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலை தவிர்க்கும் பொருட்டு 8 மணி நேர வேலை என்று தீர்மானிக்கப்பட்ட நிலையில், அதை ஒவ்வொரு வருடம் மே மாதம் ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் கொண்டாடி வருகின்றனர். 1886இல் அமெரிக்காவில் இருந்து தொடங்கப்பட்ட இந்த மே தின விழா தமிழ்நாட்டிலும் 1923லிருந்து திரு. சிங்கார வேலர் அவர்கள் மூலம் அனுசரிக்கப்பட்டு இந்த வருடம் நூறாவது வருடத்தை எட்டும் வேலையில் தொழிலாளர்களுக்கெல்லாம் ஒரு போனஸ் வழங்குவது போல தற்போதைய திராவிட மாடல் அரசு தொழிற்சாலை சட்டத்தின் பிரிவில் ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக தொழிற்சாலைகள் உயர்த்திக் கொள்ளலாம் என்ற போனஸ் தான் அது. தொழிற்சாலைகளின் வேண்டுகோளுக்கிணங்கவும் தொழிலாளர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் இந்த சட்டத்திருந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
2020ல் திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது மத்திய அரசு கொண்டு வந்த இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்களே, ஆளுங்கட்சியாக மாறிய பின்னர் அந்த சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளனர்.அதுவும் சட்டசபையில் விவாதிக்கப்படாமல் கூட்டத் தொடரின் கடைசி நாள் அன்று விவாதத்திற்கு உட்படுத்தாமல் நிறைவேற்றியுள்ளனர்.
 வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்பதில் எந்த மாற்றமும் இல்லை; தொழிற்சாலைகளும் தொழிலாளர்களும் ஒன்று கூடி தீர்மானித்தால் மட்டுமே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஒட்டு மொத்த ஏமாற்று வேலை. இந்த விதிமுறையை எத்தனை நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் ஒழுங்காகப் பின்பற்றுவார்கள்? அதனை யார் முறையாக கண்காணிப்பது? இப்பொழுது மீண்டும் பழைய சூழலுக்கு செல்வதற்கு இந்தத் திட்டம் வழிவகை செய்யும் என்ற அச்சம் ஏற்படுகிறது.
1949ல் இராபின்சன் பூங்காவில் தொழிலாளர்கள், அடித்தட்டு மக்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி, இன்று அவர்களின் நலனுக்கு எதிரான போக்கை கையில் எடுத்து இருப்பது நகைமுரண் என்பதை காமராஜர் மக்கள் கட்சி சுட்டிக் காட்ட விரும்புகிறது.

அன்புடன்

பா குமரய்யா மாநிலப் பொதுச் செயலாளர்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *