சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும்

“உலகில் எண்பது நாடுகளில் பேசப்படும் மூத்த மொழியாகத் தமிழ் உள்ளது. ஆனால், அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி, சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அமைவதற்கு, இன்னும் வாய்ப்பு கனியவில்லை. மத்தியில் திரு ப சிதம்பரம் அவர்கள் உள்துறை அமைச்சராக இருந்த நிலையிலும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக திரு சதாசிவம் அவர்கள் இருந்த நிலையிலும் இதற்கான முயற்சிகள் உரிய பலனை அளிக்கவில்லை.

எல்லா இடங்களிலும் தமிழை உயர்த்திப் பிடிக்கும் பிரதமராக மோடி உள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களும், திரு ஜெய்சங்கர் அவர்களும் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். தமிழகத்தின் சார்பில் தமிழ் பேசும் 60 எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இருக்கின்றனர். இந்த நிலையில் இனியாவது கட்சிப் பாகுபாடு பார்க்காமல் தமிழால் அனைவரும் இணைய வேண்டும் என்றும், தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகக் கொண்டு வருவதற்கு தமிழக சட்டசபையில் சிறப்புத் தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அதை பிரதமர் ஏற்பார்” என்றும் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் திரு சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

2006 இல் கலைஞர் ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற போது அமைக்கப்பட்ட மாநில அரசின் திட்டக் குழுவில் உறுப்பினராக நான் நியமிக்கப்பட்டேன். அந்தக் குழுக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்ற போது, இந்தப் பிரச்சினையை அவரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

“தமிழாய்ந்த நீங்கள் முதலமைச்சராக இருக்கின்றீர்கள். தமிழ் மொழி மீது அளவற்ற பற்று கொண்ட அன்பழகன் அவர்கள் நிதி அமைச்சராக இருக்கிறார். இந்தியாவின் குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் அவர்கள் இருக்கிறார். இதைவிட தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாகக் கொண்டு வருவதற்கு சிறந்த வாய்ப்பு இருக்காது. சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினால், அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த சிறப்புத் தீர்மானம், நடைமுறைக்கு வருவதற்கு, தமிழரான குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், உறுதுணை புரிவார் ” என்று முதல்வர் கலைஞரும், நிதி அமைச்சர் அன்பழகன் அவர்களும் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் நான் எடுத்துரைத்தேன்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த செல்வி ஜெயலலிதா உட்பட அனைவரும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வரவேற்கும் நிலை உருவாகும் என்று நான் சொன்னதை ஆழ்ந்த கவனத்துடன் பரிசீலித்து, சட்டமன்றத்தில் கலைஞர் சிறப்புத் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்; குடியரசுத் தலைவர் கலாம் அவர்களோ, உச்ச நீதிமன்றத்தின் கருத்தினைக் கேட்டார். உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. உத்தரப் பிரதேசத்திலும், இராஜஸ்தானிலும் உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக இந்தி மொழி இருக்கும் போது தமிழ் மொழிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் ஏன் முடிவு எடுத்தது என்று தெரியவில்லை.

கலைஞர் எடுத்த முடிவை வலியுறுத்தி, அன்றாடம் அவருடைய வழிகாட்டுதலில் பயணிப்பதாக அறிவித்து வரும் அவரது திருமகன் ஸ்டாலின் அவர்கள், திரு சுதர்சன நாச்சியப்பன் பரிந்துரைத்தபடி தமிழக சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றித், தமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக கொண்டு வருவதற்கு உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தமிழருவி மணியன்,
தலைவர் – காமராஜர் மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *