தமிழக முதல்வரைப் பாராட்டுகிறோம்

உலக சமுதாயம் இனியும் இதை கைகட்டி வேடிக்கை பார்க்கக்கூடாது என்று இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரில் காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் குறித்து தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இண்டியா கூட்டணி மூலம் தேசிய அரசியலில் அடி எடுத்து வைத்துள்ள முதல்வர் அவர்கள், உலக அரசியலிலும் காலடி எடுத்து வைத்திருப்பதை வரவேற்கிறோம்; பாராட்டுகிறோம்.

2009இல் ஈழத்தில் முள்ளிவாய்க்கால் போர் தீவிரமடைந்த போது, இரக்கமற்ற இலங்கை அரசு எரிகுண்டுகளை வீசி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த போது வாளாவிருந்தது கலைஞர் தலைமையிலான, அப்போதைய கழக அரசு தானே! “மத்தியில் மனமோகன் சிங் அரசு, கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தயவில் பதவியில் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. அந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவிக்க வேண்டும். இதனால் இலங்கைக்குப் பின்னணியில் இருந்து வரும் இந்திய அரசு தன் நிலையைப் பரிசீலனை செய்யும் சூழல் வரும்; ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலையே நிறுத்த முடியும்” என்று அந்த நேரத்தில் திட்டக் குழு உறுப்பினராக இருந்த திரு தமிழருவி மணியன், கலைஞர் அவர்களிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

கலைஞர் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்க மறுத்த நிலையில், திரு தமிழருவி மணியன் திட்டக் குழுவில் இருந்தும், காங்கிரஸ் கட்சியில் இருந்தும் வெளியேறினார் ஆனால் கலைஞர் அவர்களோ பதவி நாற்காலியை இறுகப்பற்றிக் கொண்டிருந்ததை மறக்க முடியுமா?

உலக அரசியல் நடப்புகளில் ஆர்வம் காட்டும் தமிழக முதல்வரை பாராட்டும் அதே வேளையில், உள்ளூரில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை, ஒன்றிரண்டை மட்டும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அண்டை மாநில திராவிட சகோதரர்கள் உருவாக்கி வைத்துள்ள காவிரி – முல்லைப் பெரியாறு பாலாறு பிரச்சனைகளுக்குத் தீர்வு, ஆட்சியைப் பிடிக்க அள்ளித் தெளித்த வாக்குறுதிகளை உண்மையாக நிறைவேற்றுதல், மதுக்கடைகளைத் திறந்து வைத்துக் கொண்டே, போதையற்ற தமிழகத்தை உருவாக்கும் மாயஜாலம் போன்றவற்றிலும் முதல்வர். தனது மேலான கவனத்தை செலுத்திட வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *