தமிழ்நாடு, மழை நீர் வடிகால் வாய்க்காலா?
11/10/2023
காவிரி நதிநீர்ப் பங்கீடு கடந்த 50 ஆண்டுகளாக இடியாப்பச் சிக்கலாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 1974இல் அன்றைய பிரதமர் இந்திராவின் அறிவுறுத்தலின் பேரில் அன்றைய முதல்வர் கலைஞர் கடைப்பிடித்த மென்மையான போக்கு காவிரி நதிநீர்ப் பிரச்சனையின் ஆரம்பப் புள்ளி; முளையிலேயே கிள்ளி எறியாமல் இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.
கர்நாடக அரசு, அது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில்லை என்ற ஒரே நிலைப்பாட்டையே எடுக்கின்றது. கர்நாடகம், தமிழகத்தை காவிரி ஆற்றின் மழை நீர் வடிகால் வாய்க்காலாகத்தான் பார்க்கிறது. இப்போது, அதையும் இல்லாமல் செய்வதற்கு புதிய அணைகள், தடுப்பணைகள் என்று திட்டங்கள் கர்நாடகத்தில் தீட்டப்பட்டு வருகின்றன.
தனது ‘திராவிட சகோதரர்’ சித்தராமையாவிடம் பேசி பற்றாக்குறைக்கான நீர்ப் பங்கிட்டு முறையைக் கூடப் பின்பற்ற வைக்க முடியாமல் திணறுகிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள். கர்நாடக அரசு எந்த நீதிமன்ற தீர்ப்புக்கும், ஆணையத் தீர்ப்புக்கும் தலை வணங்குவதில்லை. அக்டோபர் 15 வரை 3000 கன அடி நீர் தருவதற்கும் கர்நாடக அரசுக்கு மனம் இல்லை. காவிரி டெல்டாவில் வாடி நிற்கும் பயிர்களைக் காத்திட கர்நாடக அரசு முன்வர வேண்டும்.
காவிரி நதிநீர் ஆணையம், தனது ஆணைகளைப் பின்பற்றாத கர்நாடக அரசைக் கண்டிக்கக் கூட அதிகாரம் இன்றி இருக்கிறது. உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்புகளை மதிக்காத கர்நாடக அரசின் மீது தானாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தொடர வேண்டும். கர்நாடகத்தில் குண்டுராவ், ஹெக்டே காலத்தில் தமிழகத்தின் நெருக்கடியை உணர்ந்து தண்ணீர் திறந்து விடுதல் நடந்து உள்ளது.
ஆனால், இன்று அந்த நேச உணர்வு மங்கிப் போய், காவிரி நீர்ப் பிரச்சனை தீவிரமடைந்தால் இன்றைக்கு கர்நாடகத்தில் வாழும் தமிழ் மக்கள் ஒருவித பதட்ட உணர்வுக்குத் தள்ளப்படுகிறார்கள். தேசிய ஒருமைப்பாட்டை பேசும் கட்சிகள், நான் தமிழன் எனும் முழங்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் போன்றோர், தமிழகத்திற்கு தண்ணீர் தர தங்கள் மாநிலத் தலைமைகளை அறிவுறுத்துவதும் இல்லை.
இரு மாநிலங்களுக்கு இடையில் தீராத பிரச்சனை இருக்கும் போது மத்திய அரசின் தலையீடு தேவை என்பது அவசியமே என்றாலும் தனது இண்டியா கூட்டணி காங்கிரஸ் கட்சி அரசை, நீதிமன்ற, ஆணையத் தீர்ப்புகளை நிறைவேற்றுமாறு, திமுக அரசு வலியுறுத்த வேண்டும்; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதோடு கடமை முடிந்து விட்டதாகக் கருதக் கூடாது. தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தற்போதைய இண்டியா கூட்டணியின் சார்பாக உள்ள திமுக, காங்கிஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசா மடந்தைகளாகவே உள்ளனர்.
நதிகளை தேசியமயமாக்கி, அணைகளை ஆணையங்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அறிவுபூர்வமாக, புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தண்ணீரைப் பகிர்ந்து அளிப்பதே சரியான தீர்வாக அமையும்; சுதந்திரமான அமைப்பாக, அதிகாரங்கள் கொண்டதாக, நதி நீர் ஆணையங்கள் அமைய வேண்டும்.
வாக்கு வங்கி அரசியலுக்காக, கருகும் பயிர்களுக்கு நீர் வார்ப்பதைத் தவிர்க்க வேண்டாம்; தாமதம் வேண்டாம் என கர்நாடக காங்கிரஸ் அரசை காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
வணக்கத்துடன்
காமராஜர் மக்கள் கட்சி