சங்கர நேத்ராலயா வடிவில் என்றும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வார்

21/11/2023 ; சென்னை

எண்ணற்ற மனிதர்களின் கண்களைக் காத்த மகத்தான மனிதநேய மருத்துவர் பத்ரிநாத் அவர்கள் இறைமையில் இரண்டறக் கலப்பதற்குக் கண் மூடிவிட்டார் என்ற செய்தி வந்து சேர்ந்தபோது என் இதயம் தாளாமல் இரு விழிகளில் கண்ணீர் கசிந்தது. கண் மருத்துவத்தில் நிகரற்ற மனிதராக உலகப் புகழ் பெற்ற டாக்டர் பத்ரிநாத் போன்ற மாபெரும் மனித குலச் சேவகர்கள் அரிதினும் அரிதாகவே இந்த மண்ணுலகில் அவதரிப்பர். Life is to give but not to take என்ற வாழ்வியல் பேருண்மையை அறிந்த பெருங்கருணையாளர் டாக்டர் பத்ரிநாத் அவர்கள்.

தன்னலத் துறப்பு, எளிமையும் நேர்மையும் நிறைந்த வாழ்க்கை முறை, இனிமையும் அமைதியும் அன்பும் ததும்பும் இதயம், எளிய மக்களின் நலனில் நாட்டம், உயர் ஒழுக்கங்களில் உறுதிப்பாடு ஆகியவற்றின் அரிய கலவையாக நம்மிடையே வலம் வந்த அந்த மாமனிதர் சங்கர நேத்ராலயாவின் வடிவில் என்றும் மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்றுத் திகழ்வார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மானுட சேவையில் வாழ்வை முற்றாக அர்ப்பணிப்பவர்களே இறைவனுக்கு நெருக்கமாக இருப்பார்கள்.

அமரர் பத்ரிநாத் அவர்கள் இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறச் சென்று விட்டார். அவரால் கண் பெற்றவர்கள் அனைவரும் இதயத்தில் என்றும் வைத்து அவர் நினைவைப் போற்றுவார்கள். அவருடைய அன்பிற்கு ஆளாகும் அருளைப் பெற்ற என் இதயம் அவர் நினைவுகளோடு என்றும் வாழும்.

அன்புடன்

தமிழருவி மணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *