நடிப்பு சுதேசிகள் யார்?
திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக 3174 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக விவசாயப் பெருங்குடி மக்கள் கடந்த 125 நாட்களாக காந்திய வழியில் அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். களத்தில் நிற்கும் அவர்களின் மனவுறுதியை உடைத்திடும் வகையில் தமிழ்நாடு காவல்துறை 20 பேரைக் கைது செய்துள்ளது. அவர்களின் ஏழு பேர் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சி உள்ளது.
குண்டர்கள் சட்டம் என்பது வன்செயல்கள் செய்வோர், கள்ளச் சாராய வணிகர்கள், வனச் சட்டங்களை மீறுவோர், போக்கிரிகள், தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை அடக்கிட 1982 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. தங்களது பாரம்பரிய மண்ணை காக்கப் போராடி வரும் விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சி இருப்பது முற்றிலும் ஜனநாயகத்தை அவமதிக்கின்ற செயலாகும்.
சேலம் நெடுஞ்சாலைக்காக விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்றவர்களே, தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்கு விளைநிலங்களை கையகப்படுத்தலாம் என்ற நிலையை எடுப்பது இரட்டை வேடம் தானே! எதிர்க்கட்சியாக இருந்தபோது அனைத்துப் போராட்டக் களங்களிலும் பக்கத்தில் அமர்ந்து “நாங்க வந்தா விடிஞ்சிடும்” என்று வாக்கு அறுவடைக்காக வகை தொகை இன்றி வாக்குறுதி அளித்தவர்கள், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் “தெரிவு நினைவு இழப்பு (Selective Amnesia)” நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டனத்திற்கு உரியது. இந்த நோய், காலம் காலமாய் பாட்டாளி மக்கள் உரிமைகளுக்காகப் போராடியவர்களைக் கூடத் தொற்றிக் கொண்டு இருப்பது இன்னும் மோசமானது.
உடனடியாகக் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள் அனைவரையும் நிபந்தனைகள் எதுவும் இன்றி விடுவிக்க வேண்டும். தொய்வுற்ற நிலையில் உள்ள கும்மிடிப்பூண்டி, புதுக்கோட்டை, மானாமதுரை போன்ற தொழிற் பேட்டைகளை புத்தாக்கம் செய்ய வேண்டும். இதன் மூலம் வளர்ச்சி பரவலாவதுடன், தேவையற்ற வகையில் விளைநிலங்களை கையகப்படுத்துவதையும் தவிர்க்க முடியும்.
தங்கள் திராவிட மாடலுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தோரை நடிப்பு சுதேசிகள் என வர்ணித்தார் முதல்வர் மு க ஸ்டாலின். இப்போது யார் நடிப்பு சுதேசிகள் என்பதை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். அதன் விளைவுகள் வருங்காலத்தில் மக்கள் மன்றத்தில் எதிரொலிக்கும் என்பதை காமராஜர் மக்கள் கட்சி சுட்டிக் காட்ட விரும்புகிறது