புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான வாய்ப்புகள் மழையோடு கரைந்து போய்விட்டன

மழையோடு மழையாக ஒரு செய்தி கரைந்து போய்விட்டது; தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் துவக்கும் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டது தமிழ்நாடு அரசு. இதனால்,மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி என்ற இலக்கை எட்ட முடியாமல் போய்விடும்.

சென்ற நவம்பர் 16 முதல் 23 வரை தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளம் திறந்து இருந்தது. இதில் பதிவு செய்திருந்தால், 2024இல் பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் துவக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கும்.

60% நிதி மத்திய அரசால் வழங்கப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் 2019இல் அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட்டன. ஆனால் இந்த 11 கல்லூரிகளுக்கும் தமிழகத்தை அப்போது ஆண்ட அதிமுக அரசு நிதி ஆதாரத்தை வழங்கியது. இப்பொழுதோ மத்திய அரசின் நிதிக்காகக் காத்து இருக்கிறோம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மத்திய அரசு அறிவித்திருந்த விதியின்படி தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் துவக்க வாய்ப்பு இல்லாமல் இருந்தது. தமிழக முதல்வர், சில மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்குத் தேவை இருப்பதால் இந்த விதியில் இருந்து விலக்கு கேட்டிருந்தார்.

அந்த விலக்கை, மத்திய மருத்துவ ஆணையம் அளித்தும் தமிழ்நாடு பயன்படுத்தவில்லை. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு மா சுப்பிரமணியன் அவர்களிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேட்ட பொழுது, 2024இல் காட்சிகள் மாறும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அண்மையில் நடந்து முடிந்த மாநிலத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் பொழுது காட்சிகள் மாறப் போவதாகத் தெரியவில்லை. வலுவற்ற சில காரணங்களைக் கூறி அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில், புதிய மருத்துவ கல்லூரிகளைத் துவக்கும் வாய்ப்பைத் திராவிட மாதிரி அரசு நழுவ விட்டு விட்டதாக காமராஜர் மக்கள் கட்சி குற்றம் சாட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *