இது திராவிட சாராய ஆட்சி
20/06/2024, கள்ளக்குறிச்சி
தமிழகத்தில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்; கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கடந்த வருடம் 2023 இல் விஷ சாராயம் அருந்தி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அவ்வளவு எளிதில் மறக்க இயலாது. அந்த நிலை மாறுவதற்குள் 2024 ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் அந்த சம்பவத்தை மிஞ்சும் அளவில் கள்ளச்சாராய சாவு ஏற்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பதை விட கள்ளச்சாராயத்தில் கல்லா கட்டுகிறது என்று கூறுவதே சரியானது.
கடந்த 2023 வருடம் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு அவர்கள் அறிக்கையில் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 30000 லிட்டருக்கு மேல் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டது என அறிக்கை வெளியிட்டார். இந்த வருடம் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக இருக்கக்கூடிய ஷங்கர் ஜிவால் என்ன சொல்லப் போகிறார்?
கள்ளச்சாராயத்தை ஒழிப்பதாக நடிக்கும் தமிழக அரசு, நல்ல சாராயம் என மதுபானக் கடைகளையும், மது பார்களையும் எங்கும் நீக்கமறத் திறந்து வைத்து தமிழக மக்களை நாளுக்கு நாள் மரணம் அடையச் செய்கிறது. சொல்லாததையும் செய்வதாக தனக்குத்தானே மகுடம் சூட்டிக் கொள்ளும் முதல்வர் இந்த நிலையை மாற்ற என்ன செய்யப் போகிறார்?
கள்ளச்சாராயத்தைத் தேடி மக்கள் செல்வதற்கு காரணம் என்ன? நல்ல சாராயம் என்ற பெயரில் நீங்கள் விற்பனை செய்து மக்களை குடிகாரர்களாக மாற்றி அவர்களுக்கு மதுப்பிரியர்கள் எனப் புனைப் பெயரும் சூட்டி, மதுவுக்கு அடிமை ஆகி மது வாங்க முடியாத நிலையில் மலிவான விலையில் கிடைக்கும் கள்ளச் சாராயத்தை நோக்கிப் பயணித்து மரணம் என்ற பாதைக்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர்.
கடந்த 2023 கள்ளச்சாராய சாவுகளுக்கு 10 லட்சம் கொடுத்தீர்கள். 2024 கள்ளச்சாராய சாவுகளுக்கு எத்தனை லட்சம் கொடுக்க இருக்கிறீர்கள்?
கள்ளச்சாராய மரணம் ஏற்படும் போதெல்லாம் காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்வதோடு உங்கள் கடமை முடிந்து விடுகிறதா? தமிழக ஆட்சிக்குத் தலைமை ஏற்கும் நீங்கள் எப்போது உங்களை மாற்றிக் கொள்ளப் போகிறீர்கள்? மாற்றமும், மற்ற நடவடிக்கைகளும் உங்களில் இருந்து தொடங்கட்டும்.
தேர்தல் வந்தால் பணம் கொடுத்து வாக்கு அறுவடை; சாராய சாவுக்கு நிவாரணம் என்ற பெயரில் 10 லட்சம் கொடை. மதுவால் கிடைக்கும் வருமானம் தொழுநோய் பீடித்தவரின் கையில் இருக்கும் வெண்ணைக்கு சமம் என்று அந்த வருமானத்தை மறுதலித்த அண்ணா, உங்கள் நினைவில் இருக்கிறாரா?
இது திராவிட மாடல் அல்ல; சாராய மாடல் என்று மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனர். கள்ளச்சாராய இறப்புகளுக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சம், டாஸ்மாக் அரசு வழங்கும் நல்ல சாராயத்தினால் மரணத்தை தழுவுவோர்களுக்கு கிடைப்பதில்லை.
காமராஜர் என்னும் மகான் தமிழக மக்களுக்கு கல்வி கொடுத்தார்; மதிய உணவு கொடுத்தார். ஆனால் திராவிட அரசியல் மது கொடுத்து மக்களை மரணத்தை நோக்கி நகர்த்துகிறது.
ஸ்டாலின் ஆட்சி, காமராஜர் ஆட்சி என்கின்றீர்கள். காமராஜர் ஆட்சி காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்டா? மு க ஸ்டாலின் அரசுக்கு சாமரம் வீசும் மகான்கள் இப்போது எங்கே, எப்படி முகம் காட்டப் போகிறார்கள்?
கள்ளச்சாராய மரணங்களுக்கு தார்மீகப் பொறுப்பு எடுத்து, இந்த துயர சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுங்கள்; தமிழகத்தை மதுவற்ற மாநிலம் ஆக்க ஒரு அடியாவது முன்னெடுத்து வையுங்கள் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.