மாஞ்சோலைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி காட்ட வேண்டாமா?
26/7/2024 ,
திருநெல்வேலியில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டம், தனது நூற்றாண்டு காலப் பயணத்தை முடித்துக் கொள்கிறது. அந்த தோட்டத் நிர்வாகமான பாம்பே பர்மா வர்த்தக நிறுவனம், குத்தகை காலம் நிறைவுக்கு வருவதை காரணமாகக் காட்டி அங்குள்ள தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
சிங்கம்பட்டி ஜமீன்தாரிடமிருந்து 1929 ஆம் ஆண்டு பெற்ற 99 ஆண்டு குத்தகை வரும் 2028 ஆம் ஆண்டு நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் மாஞ்சோலையை வனத்துறை காப்புக்காடாக அறிவித்துள்ளதால், குத்தகை நிறைவு காலத்திற்குள் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டு உள்ளனர்.
மாஞ்சோலையின் இயற்கை அழகுக்கு மாறாக அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் வலியும், வேதனையுமே நிறைந்து இருக்கின்றன. கண்ணுக்கு குளிர்ச்சியான தேயிலைத் தோட்டங்களின் வனப்பில், உயிரை உறையச் செய்யும் தொழிலாளர்களின் கடின உழைப்பு மறைந்திருக்கிறது.
தங்களுடைய பொருளாதார வலி சற்றே குறைந்திட, 1999 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி, தினக்கூலி உயர்வு கேட்டு நெல்லை மாநகரில் போராடிய மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள், அன்றைய கலைஞர் அரசின் காவல்துறையின் தாக்குதலைத் தாங்க முடியாமல், தாமிரபரணி ஆற்றை நோக்கித் தள்ளப்பட்டு 17 தொழிலாளர்கள் “ஜல சமாதி” ஆனார்கள்.
அந்தப் போராட்டத்தின் இருபத்து ஐந்தாம்ஆண்டு நினைவு நாள் கடந்த ஜூலை 23 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. கலைஞர் அரசு சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறது என்று எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது விமர்சனக் கணைகளைத் தொடுத்தவர்கள் இன்று ஆளும் வரிசையில் அமர்ந்து கொண்டு அப்பாவியாக நடிக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கில் பணியாற்றிய தொழிலாளர்களின் எண்ணிக்கை, தற்போது சுமார் 650 ஆக சுருங்கிவிட்டது. இந்த சூழலில் தான் குத்தகை நிலத்தை ஒப்படைப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகளைத் தொடங்கி, அதன் ஒரு பகுதியாகத் தேயிலைத் தோட்டத்தில் உற்பத்தியைக் குறைத்து, அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை விருப்ப ஓய்வுத் திட்டத்தில் (?) வெளியேற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
நான்கு தலைமுறையாக மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தேயே நம்பி வாழ்ந்து வரும், தோட்ட வேலையைத் தவிர வேறு வேலைகள் எதுவும் தெரியாத இந்தத் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் வாழ்வாதாரத்திற்கு, திராவிட மாடல் அரசு மாற்று வழியை ஏற்படுத்தித் தர வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
அன்புடன்
பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர்.