கோவை குப்பைக்கிடங்கு தீ விபத்து 27லட்சத்து 52ஆயிரம் செலவு l வெள்ளை அறிக்கை l காமராஜர் மக்கள் கட்சி

கோவை குப்பைக் கிடங்கு தீ விபத்து செலவுகள் – வெள்ளை அறிக்கை வேண்டும்

கடந்த ஏப்ரல் 6-தேதி கோவை மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ பிடித்ததில் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பைகள் எரிந்தன. இந்த தீத்தடுப்பு பணிக்காக 27 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் செலவு என கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தீத்தடுப்பு பணிக்காக கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டதாகவும், சராசரியாக 13 தீயணைப்பு வாகனங்களும், அதை இயக்க ஒரு வாகனத்திற்கு 14 பேரும் பணிபுரிந்ததாகவும், தண்ணீர் சப்ளை செய்ய நாள் ஒன்றுக்கு 23 முதல் 42 லாரிகள் வரை பயன்படுத்தப்பட்டதாகவும், தீ எரிந்த 12 நாட்களில் தினமும் சுமார் 500 முதல் 600 நபர்கள் தொடர்ச்சி முறையில் 24 மணி நேரமும் பணி ஆற்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் காலை, மதியம், இரவு என மூன்று வேலைகளும் தரமான உணவு, வெயில் காலம் என்பதால் குடிநீர், பிஸ்கட், உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதற்கு 27 லட்சத்து 52 ஆயிரம் செலவிடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி இந்த 27 லட்சத்து 52 ஆயிரம் செலவிடப்பட்டதற்கான முறையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அந்த அறிக்கையில் எந்தெந்த மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது?
வரவழைக்கப்பட்ட மாவட்டத்தின் பெயர், மாவட்டத்திலிருந்து தீயை அணைப்பதற்கான இடத்திற்கு வந்த தொலைவு ( கிலோமீட்டர் ), வாகனங்களுக்கு நிரப்பப்பட்ட டீசல் கட்டணம் (கட்டண ரசீது) எவ்வளவு எனவும்,

தீயணைப்புப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு எந்தெந்த உயர்தர உணவகங்களில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டது? அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் கட்டண விபர ரசீது,

பணிபுரிந்த நபர்களுக்கு குடிநீர், எத்தனை லிட்டர் 12 நாட்களுக்குத் தரப்பட்டது? ஒரு லிட்டர் குடிநீர் விலை எவ்வளவு? அதன் ரசீது,

காலை, மாலை,இரவு என பணிபுரிந்த பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட தேநீர் விலை, ஒரு நபருக்கு எவ்வளவு எனவும், அதற்கான ரசீது,

பணி புரிந்தவர்களுக்கு தினக்கூலியாக வழங்கப்பட்டதா அல்லது பணி முடிந்த பின் பணம் வழங்கப்பட்டதா எனவும், வழங்கப்பட்ட பணம் முறையாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதா, பணிபுரிந்தவர்களின் விவரங்கள் அனைத்தையும், முறையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மக்களின் கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் நடந்து கொள்ள வேண்டும் கோவை மக்கள் தங்களுடைய மாநகராட்சி வளர்ச்சிக்காக ஒவ்வொரு வருடமும் சொத்து வரி, குடிநீர் வரி, வணிகவரி என பல்வேறு காலகட்டங்களில் மாநகராட்சிக்குப் பணம் செலுத்துகின்றனர். அவர்களின் வரிப்பணம் முறையான வகைகளில் செலவிடப்பட்டதா என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனைத் தெளிவுபடுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் அனைத்து செலவினங்களுக்கான ரசீதுடன், செலவு செய்யப்பட்ட பண விவரங்களை மக்களிடம் வெள்ளை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *