விளையாட்டுத் தனமாக சிந்திக்கிறார்கள்
12/8/2024
தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை கொடுக்க வழி இல்லை; கல்வித் துறை, மருத்துவத் துறை, மின்வாரியம் போக்குவரத்து துறை, உள்ளாட்சித் துறை என்று துறைதோறும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வழியில்லை; சாலைப் பள்ளங்களால் ஏற்படும் உயிர்ப்பலிகளைத் தடுக்க வழி இல்லை.
ஆனால், “கும்பி கூழுக்கு அழுகிறது; கொண்டை பூவுக்கு அழுகிறது” என்கிற கதையாக சென்னை மாநகரில் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஃபார்முலா நான்கு கார்ப் பந்தயம் ரூபாய் 42 கோடி செலவில் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பந்தயத்தினால் மக்கள் அடையும் பயன்கள் எதுவும் இல்லை; மற்றவர்களுக்கு வேண்டுமானால் பயன் அளிக்கலாம். இதைத் தான் சொல்லாததையும் செய்யும் திராவிடம் மாடல் அரசு என்று முதல்வர் குறிப்பிடுகிறாரோ!?
எனவே, சென்னை மாநகரில் கார்ப் பந்தயம் நடத்தும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும். அப்படி சிலரின் விளையாட்டுத்தனமான விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்குமேயானால், இருங்காட்டுக்கோட்டை வளாகத்தைப் பயன்படுத்தி கார்ப் பந்தயத்தை நடத்திக் கொள்ளுங்கள் என்று காமராஜர் மக்கள் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.
பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர்,
காமராஜர் மக்கள் கட்சி