ஆளுங்கட்சியானால் மறந்து போச்சு
14/11/24
சென்னை கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியின் மகனால் மருத்துவர் பாலாஜி கத்தி குத்துத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் நலம் பெற இறையருளை வேண்டுகிறோம். மருத்துவ சிகிச்சையில் குறைபாடு இருப்பதாகக் கருதினால் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நிவாரணம் பெற வேண்டுமே தவிர வன்முறையைக் கையில் எடுப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. அரசு நிர்வாகமும் சேவைக் குறைபாடுகள் பற்றி புகார்கள் எழும்போது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில இடங்களில் மருத்துவர்களால் போதிய கவனம் செலுத்த முடியாமல் போவதற்கு அதிக பணிச் சுமையும், மருத்துவர்கள் பற்றாக்குறையும் காரணங்களாகக் கூறப்படுகிறது. தமிழக அரசு இந்தக் குறைகளைக் களைந்து, ஏழை, எளிய மக்கள் தரமான சிகிச்சை பெற்றிட ஆவண செய்திட வேண்டும்.
மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலை, கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவர் குடும்பங்களுக்கு கூட அரசு உதவாத நிலை, “எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு, அதுவே ஆளுங்கட்சியானால் மறந்து போச்சு” போன்ற இரட்டை வேட நிலைகளே, அவர்களை போராட்டத்தை நோக்கித் தள்ளுகிறது. ஆயினும் மக்கள் நலனையே முன்னெடுத்துச் செயல்படும் மருத்துவர்கள், போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும்; அரசு மருத்துவர்களுக்குப் பணியின் போது உரிய பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.