தேர்ந்தெடுக்கப்பட்ட மறதியிலிருந்து வெளியே வாருங்கள்
28/11/24
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கண்டு உரையாற்றிய தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள், “இந்தியாவிலேயே, ஏன் உலக அளவிலேயே ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல் துறையாக தமிழக காவல்துறை விளங்கிக் கொண்டிருக்கிறது; அதை யாரும் மறுக்க முடியாது” என்று தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வாசித்து இருக்கிறார்.
அப்படிப் “புகழ் வாய்ந்த” தமிழகக் காவல்துறையால் ஆண்டுகள் பலவானாலும், வேங்கைவயல் குடிநீர்த் தொட்டி விவகாரத்தில் குற்றம் இழைத்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதை ஏன் என்று முதல்வர் அவர்கள் விளக்க வேண்டும்; அது மட்டும் அல்ல, திரைப்படக் கலைஞர் கஸ்தூரி அவர்களைத் தேடிக் கைது செய்வதில் காட்டிய அதே முனைப்பை, சக்தி வாய்ந்த அமைச்சரின் சகோதரரைக் கண்டுபிடித்து கைது செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பது ஏன் என்றும் அறிவிக்க வேண்டும்; கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்றவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல், காவல்துறை கண்களை மூடிக்கொண்டு இருந்தது ஏன் என்றும், காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கின்ற முதல்வர் அவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.
மேலும் புதிதாகப் பணியில் சேர்ந்த அந்தக் காவலர்களுக்கு அறிவுரை வழங்கும் போது “சைபர் குற்றங்கள், போதை ஒழிப்பு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சவாலாக உள்ளன; அவற்றை எதிர்கொள்ள உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் கூறி இருக்கிறார்.
குற்றங்களைப் பற்றி குறிப்பிடும் மதுப்பழக்கத்தால் உருவாகும் குற்றங்களை முதல்வர் வசதியாக மறந்துவிடுகிறார். முதல்வர் அவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மறதியில் இருந்து விடுபட்டு மேலே எழுப்பியுள்ள ஐயங்களை எல்லாம் தெளிவுபடுத்துவார் என்று காமராஜர் மக்கள் கட்சி நம்புகிறது.
பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர்,
காமராஜர் மக்கள் கட்சி.