வெட்டிச் செலவுகள் செய்யாமல், குறளுக்கு உண்மையாக இருப்பதே சரியான போற்றுதல்
30/12/24
“முக்கூடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா” என்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு விழா எடுத்துக் கொண்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள். வெள்ளி விழாவை ஒட்டி எழுதியுள்ள கடிதத்தில் “வள்ளுவர் நமக்கு வெறும் அடையாளம் மட்டுமல்ல” என்று வார்த்தை விளையாட்டு ஆடி உள்ளார் முதல்வர்.
வள்ளுவப் பேராசான் வகுத்து அளித்த வாழ்க்கை நெறிகளை, அரசியல் முறைகளைப் பின்பற்றாமல் வெள்ளி விழா கொண்டாட்டத்தால் விளையும் பயன்கள் தான் என்ன? என்பதை முதல்வர் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். “பயனில சொல்லாமை” என்ற இருபதாவது அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களையும் படித்துப் புரிந்து கொண்டால், முதல்வர் வெற்று வார்த்தைப் பின்னல்களை விட்டு வெளியே வரும் நல்வாய்ப்பு கனியும்.
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் பலவற்றை வசதியாக மறந்து விடுகின்றனர், முதல்வரும் அவரது கழகத்தினரும். அவர்கள் வாங்கிப் பிடிக்கும் குறளில் “கள்ளுண்ணாமை” என்ற 93 ஆவது அதிகாரம் கண்களில் படவில்லையோ? அப்படியே பட்டு, படித்திருந்தாலும் அதைப் பின்பற்ற வேண்டும் என்ற உறுத்தல் இல்லாமல் இவர்கள் உலா வந்து கொண்டிருக்கிறார்களா? அவ்வப்போது தந்தை வேடம் பூணும் முதல்வர் டாஸ்மாக் கடைகளைக் கண்டால் மட்டும், ஏற்ற வேடத்தை மறந்து விடுகிறார். விழா எடுத்து வெட்டிச் செலவுகள் செய்யாமல் குறளுக்கு உண்மையாக இருப்பதே சரியான போற்றுதலாக இருக்கும் என்று காமராஜர் மக்கள் கட்சி சுட்டிக் காட்ட விரும்புகிறது.
பா குமரய்யா,மாநிலப் பொதுச் செயலாளர்,காமராஜர் மக்கள் கட்சி.