தமிழகம் எப்போது தலைநிமிரும்?
17/01/25
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துவக்க விழாவில் அரங்கேறிய காட்சிகள் பெரும் அவலத்திற்கு உரியவை. துணை முதல்வர் ஜல்லிக்கட்டைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில், அவரது திருமகனும், முதல்வர் மு க ஸ்டாலின் பேரனும் ஆகிய இன்பநிதியும், அவரது கூட்டாளியும் மேடையில் அமர வைக்கப்படுகிறார்கள்.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்து, புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை அதிகாரியாக இருந்த, பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த பழனிவேல் தியாகராஜன் அவர்களும், பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு இன்பநிதிக்கு சேவை செய்த காட்சிகள், ஏ தாழ்ந்த தமிழகமே! எப்போது தலை நிமிர போகிறாய்? என்ற கேள்வியை நம் முன் வைக்கின்றன.
“சின்ன சின்னவர்” இன்பநிதி தன் கூட்டாளி நிற்பதைக் கண்டு மனம் பதைக்க அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித் தலைவரை அவரது இருக்கையில் இருந்து எழுப்பி இன்பநிதி கூட்டாளியை அமர வைக்கிறார்கள். இன்பநிதிக்கு அவ்வளவு தான் ஞானம் என்றாலும், அவரது அறிவார்ந்த தந்தை, சின்னவர், துணை முதல்வர் உதயநிதியாவது, அதனைத் தடுத்திருக்க வேண்டும். அவரும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.
அரசு விழாவில், இன்பநிதியும், அவரது கூட்டாளியும், மேடையில் அமர வைக்கப்பட முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் கொள்ளுப் பேரன், முதல்வரின் பேரன், துணை முதல்வரின் மகன் என்பதைத் தவிர வேறு என்ன தகுதி படைத்தவர்? இவர்கள் குடும்ப விழாவில் இந்தக் கூத்துகளை எல்லாம் அரங்கேற்றினர் என்றால், அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. இன்னும் இது போன்ற எத்தனை அவலக் காட்சிகளை காணத் தமிழகம் காத்திருக்கிறது? என்பதை வேதனையோடு காமராஜர் மக்கள் கட்சி மக்கள் மன்றத்தின் முன் வைக்கிறது.
பா குமரய்யா,மாநிலப் பொதுச் செயலாளர்,காமராஜர் மக்கள் கட்சி