பெண்ணாகப் பிறந்தது பாவமா?
07 – 2 – 25
இன்று, நேற்று என்று சொல்ல முடியாத வகையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே செல்வது அதிர்ச்சி அளிக்கிறது. அண்ணா நகர் இளம்பிஞ்சுக் குழந்தை, அண்ணா பல்கலைக்கழக மாணவி, ஊத்தங்கரை எட்டாம் வகுப்பு மாணவி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆட்டோவில் ஏறிய வட மாநிலப் பெண், கிருஷ்ணகிரி மாணவி என்று தொடர்ந்து கொண்டே போகும் நெஞ்சை பதற வைக்கும் பாலியல் குற்றங்கள், என்னதான் ஆனது தமிழகத்திற்கும், தலைநகரமான சென்னைக்கும்? என்ற கேள்விக் கணைகளை எழுப்புகிறது.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனவே. மதுவின் பிடியில் தன்னிலை மறந்த மனித மிருகங்கள் தனது மகள், தங்கை, மனைவி, தாய் உறவுகளை எப்படிப் போற்றுவார்கள்? இதில் பெரும்பாலான குற்றங்கள் வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாணவ, மாணவியர்களுக்கு ஆசிரியர்களாலும், பாதுகாப்பைத் தேடி சரண் அடைந்த பெண்களுக்கு காவலர்களாலும் நடந்தேறுவதுதான் கவலைக்கு உரியதாக இருக்கிறது; யாரைத்தான் நம்புவது பேதை நெஞ்சம் என்று பேசத் தோன்றுகிறது.

கஞ்சா போதை, பிஞ்சுகளையும் குறி வைக்கும் அவலம் அதிகரித்து வருகிறது. பெரம்பூரில் மூன்று பெண்கள், மூன்று நாட்கள், ஆறு ஆண் மிருகங்களால் சீரழிக்கப்பட்ட நிகழ்வும் நம் நினைவுக்கு வருகிறது. அண்மையில் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள், பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அதிலும் பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளிகள் கைதானாலும், இவர்களுக்கு இந்தத் தைரியமும் துணிச்சலும் வர கட்சிகளின் பின்புலமும், அதிகார மையங்களை அனுசரித்துச் செல்லும் காவல்துறையும் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்டு கைதாகும் பலர் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று அறியும் போது, காவல்துறையின் தொடர் கண்காணிப்பு செயல்பாடுகள் குறையுடையதாகவே தெரிகின்றன. மாதராய்ப் பிறக்க மாதவம் செய்திட வேண்டும் என்ற நிலை இன்று பெண்ணாகப் பிறத்தலே பாவமா என்று தடம் புரண்டு விட்டதோ? போதை இல்லா தமிழகத்தை உருவாக்க உறுதி(?!) கொண்டிருக்கும் தமிழக முதல்வர், தமிழகம் மொத்தமாகத் தள்ளாடுவதற்கு முன் தன் பொறுப்பில் இருக்கும் காவல்துறையை விழிப்படையச் செய்ய வேண்டும். குற்றங்களுக்கு கொடிய தண்டனை என்று சட்டங்கள் இயற்றினால் மட்டும் போதாது; உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாய் விளங்கும் மது வணிகம், போதைக் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
திருமதி மீனா ஞானசேகரன், மாநிலச் செயலாளர், காமராஜர் மக்கள் கட்சி