“உள்ளாட்சியில் நல்லாட்சி” தந்தோருக்கு, தேர்தலை சந்திக்கத் தயக்கம் என்ன?
31/03/25
பல்வேறு நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அண்மையில் ஒரு புதிய கதாபாத்திரத்தை கையில் எடுத்துள்ளார்.
அதுதான் நாடாளுமன்றத் தொகுதிகளை சீரமைப்பதனால் விளையும் கேடுகளில் இருந்து காப்போம் என்பதாகும். இது குறித்து எந்த அறிவிப்பும் மத்திய அரசால் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படாத நிலையில் “வருமுன் காப்பானாக” முதல்வர் செயல்பட்டு இருப்பதை எண்ணி, எண்ணி வியந்து மகிழ்கிறோம். ஒன்பது லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்துக் கொண்டு விளம்பரங்களுக்கும், நட்சத்திர விடுதிகளில் கூட்டம் நடத்துவதற்கும் செலவு செய்யும் ஆற்றலைக் கண்டும் உளம் பூரிக்காமல் இருக்க முடியவில்லை.

இப்படிப்பட்ட பெருமைக்குரிய முதல்வர், தமிழகத்தில் தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்தாமல் இன்னும் வாய்ச் சவடால் அடித்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்தின் 28 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் ஜனவரி 2025 முடியும் என்று தெரிந்து இருந்தும், வட்டங்களை வரையறை செய்யப் போகிறோம் என்று தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் தள்ளி வைத்து உள்ளார்; உள்ளாட்சி அமைப்புகளை சிறப்பு அலுவலர்கள் மூலம் நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மாநில அரசின் கைப்பாவையாக இருந்து கொண்டு, உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தாமல் இருப்பதற்கு துணை போய்க் கொண்டு இருக்கிறது.
உள்ளாட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக மக்கள் தொடர்பில் வருபவர்கள்; மக்களும் அவர்களை எளிதாக குடிநீர், கழிவுநீர், தெருவிளக்குகள், குப்பை அள்ளுதல் போன்ற தங்களது அன்றாட அடிப்படைத் தேவைகளை அவர்களிடம் எடுத்துரைப்பார்கள்; அவர்களும் அடுத்த முறை பதவிக்கு வர வேண்டும் என்பதற்காகவாவது அவற்றை தீர்க்க முயற்சி செய்வார்கள். ஆனால், அலுவலர்களுக்கு அந்தக் கட்டாயம் எதுவும் இல்லை; மக்களை அவர்கள் தங்களுக்கு வாய்த்த நல்ல அடிமைகளாக நினைத்துக் கொண்டிருக்கும் ஆங்கிலேய ஏகாதிபத்திய மனோபாவத்தில் தான் இருக்கிறார்கள்.


ஊராட்சிப் பதவிகள் முடிந்த பின் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்த பின்னும், அமைப்புகளை மறுவரையறை செய்யும் முயற்சிகளை ஏன் முன்னமே தொடங்கவில்லை? உள்ளாட்சியில் நல்லாட்சி தந்த முதல்வருக்கு தேர்தலை சந்திக்க அச்சம் ஏற்படக் காரணம், களநிலவரம் தந்த கலவரம் தானா? மக்கள் அதிருப்தி உள்ளாட்சித் தேர்தலில் வெளிப்பட்டு விட்டால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை அது பாதிக்கும் என்ற அச்சம் தானா? கட்சிக்குள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கும் உள்குத்து வேலைகளா?இவை எல்லாம் இல்லை என்றால் அமைப்புகள் மறு வரையறை என்ற சாக்குப் போக்குகளுக்குள் ஒளிந்து கொள்ளாமல் உடனடியாகத் தேர்தல் நடத்திட உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்; தமிழகத் தேர்தல் ஆணையமும் தலையாட்டி பொம்மையாக இருக்காமல் சுயமாக செயல்பட வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
பா குமரய்யா, மாநிலப் பொதுச் செயலாளர், காமராஜர் மக்கள் கட்சி.
