நாமெல்லோரும் இரு மொழிக் கொள்கை வேண்டுமா? மும்மொழிக் கொள்கை அவசியமா?
11/03/2025
தாய் மொழிக் கல்வியே இல்லாத தமிழகத்தை அரும்பாடுபட்டு உருவாக்கி வருகின்றனர் தனியார் பள்ளிகள்! தாய் மொழி தமிழை காப்பாற்றும் நோக்கத்தில் தான் இங்கு இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் 300 க்கு மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை ஈந்தனர்.1938 முதல் பல கட்ட இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் நாம் தொடர்ந்து உறுதி காட்டி வருகிறோம்.ஆனால், அதே சமயம் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் இந்தி கற்பிப்பதிலும், பிரெஞ்சு மொழியை கற்பிப்பதிலும் காட்டும் ஆர்வத்தை, தமிழையும் ஒரு கட்டாயமாக்கி கற்பிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்பது மாத்திரமல்ல, அதை எதிர்க்கவும் செய்கிறார்கள்!

இன்றைய தினம் தமிழ்நாட்டில் மொத்த மாணவர்களில் 45 சதவிகித அளவுக்கு தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை உயரவே வாய்ப்புள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் 55 சதவிகித மாணவர்கள் தான் எதிர்காலத் தமிழை உயிர்ப்புடன் வாழ வைக்கப் போகிறவர்கள்.ஆனால், என்னவோ தெரியவில்லை. பெரும்பாலான அரசு பள்ளிகளில் தமிழ் மொழி ஆசிரியர் பணியிடங்கள் தான் நிரப்பப்படாமல் உள்ளது. தமிழ் மொழிப் பாடங்களும் மாணவர்கள் ஆசையுடன் தமிழை கற்பதாக இல்லை என்பதையும் இங்கு மிகுந்த வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.
இது ஒருபுறமிருக்க, தனியார் பள்ளிகளில் தமிழை ஒரு கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணைக்கு, தமிழக அரசே எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறது என்பதை பா.ம.க. தலைவர் அன்புமணியின் அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது;தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் சட்டம் 2006 ஆம் ஆண்டில் நிறைவேற்றப் பட்டது. அதன்படி ஆண்டுக்கு ஓர் வகுப்பு வீதம் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட்டு 2015-16ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன்பின் 9 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புத் தேர்வில் தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கப்படவில்லை. அதற்காக ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்க் கட்டாயப் பாடமாக்கப்படுவதற்கு எதிராக தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தை தடை செய்ய முடியாது என்று கூறிவிட்ட உயர்நீதிமன்றம், 2022-23ஆம் ஆண்டு முதல் தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டது. அதை எதிர்த்து தனியார் பள்ளிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் நாள் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,‘‘ உள்ளூர் மொழியைக் கற்றுக் கொள்வது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளது. அதே நேரத்தில் உள்ளூர் மொழியை கற்பிக்க தனியார் பள்ளிகள் மறுப்பது தேச ஒற்றுமைக்கு நல்லதல்ல’‘ என்று கூறியது.
எனினும், பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்க ஒரு மாதம் மட்டுமே இருந்த நிலையில், அதற்குள்ளாக வழக்கை விசாரித்து முடிக்க முடியாது என்பதால், தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தை செயல்படுத்துவதிலிருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும், கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலை மாதத்தில் வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிப்பதாகவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்திருந்தால், 2023 – 24ஆம் ஆண்டிலேயே தமிழ்க் கட்டாயப்பாடமாகியிருக்கும். ஆனால், இன்று வரை அந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வர திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், 2015-16ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ உள்ளிட்ட பிற கல்வி வாரியங்களுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக்கி, கடந்த 18.09.2014 அன்று அப்போதைய தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி நடப்பு 2024-25ஆம் ஆண்டில் பிற பாடத்திட்டங்களை பின்பற்றும் தனியார் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாத திமுக அரசு, அந்தக் கடமையிலிருந்து தனியார் பள்ளிகளைக் காப்பாற்றும் நோக்குடன் 2023ஆம் ஆண்டு மே மாதம் தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதன்படி, சிபிஎஸ்இ உள்ளிட்ட பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் தமிழைக் கட்டாயப் பாடமாக்கத் தேவையில்லை; அதற்கு பதிலாக தமிழைக் கூடுதல் கட்டாயப் பாடமாக்கினால் போதுமானது என்பதாகும். இன்னொருபுறம், தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாக்கும் அரசாணை செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து 2000 ஆம் ஆண்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு 25 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை விசாரணைக்கு கொண்டு வரவோ அல்லது தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாக்கி சட்டம் கொண்டு வரவோ மாறி,மாறி ஆட்சிக்கு வருபவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம், தமிழை வெறுக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தமிழக ஆட்சியாளர்கள் செலுத்தி வரும் பதில் மரியாதை தான். இது தமிழ்த் துரோகம்.’’
உண்மையில், நமது தொலைகாட்சி ஊடகங்கள் இரு மொழியா? மும்மொழியா? என்பதற்கு எத்தனையோ விவாதங்கள் நடத்தின! அதே போல தமிழ் நாட்டில் தமிழ் மொழிக் கல்வி ஏன் புறக்கணிக்கப்படுகிறது? அதற்கான தடைகளை தகர்ப்பதற்கு நாம் எப்போது ஒன்றுபடப் போகிறோம் என்று விவாதிப்பார்களா? விவாதித்தால் அது தமிழ்ச் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், இங்கு ஊழல் பணத்தில் கோடிக் கோடியாய் சம்பாதிக்கும் அரசியல்வாதிகள், தங்கள் ஊழல் பணத்தில் சிறு தொகையையாவது தகுந்த கல்வியாளர்களைக் கொண்டு சிறந்த தமிழ்வழிக் கல்விக் கூடங்களை நடத்தி, தமிழை அடுத்த தலைமுறையிடம் ஆழமாக நடவு செய்யப் பாடுபடலாமே!
நன்றி; சாவித்திரி கண்ணன்