மொழி ஒரு தடையாக இல்லை
15/07/2025
விருதுநகரில் இருந்த ஒரு பெட்டிக்கடைதான் காமராஜரை, தன் குடும்பத்தினர் வழிகாட்டிய துணிக்கடை வணிகத்திலிருந்து விடுதலைப் போராட்டத்துக்குத் திருப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. நாட்டின் விடுதலையில் நாட்டம் கொண்ட மூத்தவர்கள் சிலர், பெட்டிக்கடையில் அரசியல் நடப்புகளைப் பேசுவது காமராஜரின் ஆர்வத்தைத் தூண்டியது. காலப்போக்கில் அவரும் அந்தக் கூட்டத்தில் ஒருவர் ஆகிப்போனார். பின்னாட்களில் அவர் சந்தித்த தீரர் சத்தியமூர்த்தி, பெரியார், ராஜாஜி உள்ளிட்ட பலர் அவரைவிட, வயதில் மூத்தவர்கள். இன்னொரு பக்கம், தமிழ்நாட்டைத் தாண்டி அறிமுகமான நேரு முதலிய தலைவர்களிடம் பழக வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இவர்கள் அனைவருடனும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் இணைந்து சுமுகமாகப் பணியாற்றும் அளவுக்கு காமராஜரின் செயல்பாடுகளும் தகவல்தொடர்புத் திறனும் இருந்தன. மொழியும் அவருக்கு ஒரு தடையாக இல்லை. தேவைப்பட்ட சூழல்களில் ஆங்கிலத்தில் கச்சிதமாகப் பேசக்கூடியவராகவே காமராஜர் இருந்ததை அவர் குறித்து எழுதப்பட்ட நூல்கள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
இது காந்தியடிகள் 1946இல் வந்தபோது ஏற்பட்ட சம்பவம். அது குறித்து அரிஜன் பத்திரிகையில் எழுதினார். தமிழக காங்கிரஸில் சிலர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த காந்தியடிகள் தனது ஆங்கில மொழிக் கடிதத்தில் குறிப்பிட்ட சொல்லைப் பயன்படுத்தியிருந்தார்.
