ஏற்றுமதிக்காக இந்திய சந்தைகளை அமெரிக்காவுக்கு திறக்கவேண்டாம்

7/08/2025

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு ஆகஸ்ட் 7-ம்  தேதி முதல் 25% வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துவிட்டார். அது தவிர, அபராதமாக  மேலும் ஒரு தீர்வையும் உண்டு என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால் எவ்வளவு என்று தெரிவிக்கவில்லை. இந்தியாவுக்கு 25% ஏன் என்பதற்கான காரணமாக அவர் கூறுவது, இந்தியா அதன் சந்தைகளை அமெரிக்க வியாபாரிகளுக்கு  திறந்துவிட  மறுக்கிறது என்பதுதான்.

இந்தியா அதிக அளவில் அமெரிக்க பொருட்களுக்கு  வரி போடுவதுடன், மரபணு மாற்றம் செய்த விவசாய மற்றும் பால் பொருட்களுக்கு தடை விதிக்கிறது என்று கோபப்படுகிறார் ட்ரம்ப்.

அபராதம் எதனால்? – ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் மற்றும் ராணுவத் தளவாடங்கள் வாங்குவதை  சுட்டிக் காட்டுவதுடன்,  இந்தியா, அமெரிக்க டாலருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பிரிக்ஸ் அமைப்பில்  இருப்பதையும்  அபராதத்துக்கான காரணமாக ட்ரம்ப் குறிப்பிடுகிறார்.

ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.  உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் நேட்டோ அமைப்பின் கீழ் உதவி வருகின்றன. இந்தப் போர் காரணமாக ரஷ்யாவிடமிருந்து அதன் முக்கிய ஏற்றுமதி பொருளான கச்சா எண்ணெயையும் இயற்கை எரிவாயுவையும்  வாங்குவதை நேட்டோ நாடுகள் நிறுத்திவிட்டன. மற்ற நாடுகளும் அப்படிச் செய்ய வேண்டும் என்று நேட்டோ நாடுகளும் அமெரிக்காவும் கேட்கின்றன.

இந்தியா விடுதலை  பெற்றதிலிருந்து சோவியத் யூனியன் (ரஷ்யா) இந்தியாவுக்கு முக்கிய நட்பு நாடு. சுதந்திர இந்தியாவின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய நாடு. பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின்  தாக்குதல்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து  பல தசமங்களாக ராணுவ தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

வியாபார அரசியல் லாபங்களுக்காக அவ்வப்போது இந்தியாவோடு நட்பு பாராட்டும் அமெரிக்கா, பல சமயங்களில் இந்தியாவை கைவிட்டிருக்கிறது. பாகிஸ்தானுக்கு உதவியிருக்கிறது.  ஆனால், ரஷ்யாவுடனான உறவில் மாற்றமில்லை. எப்போதும் நட்பு நாடுதான்.

மற்ற பல நாடுகள் தவிர்க்கும் நிலையில், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் எதிர்ப்புக்கு அஞ்சாமல் ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. குறிப்பாக, ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிய பின் கூடுதலாக வாங்குகிறது. காரணம், மற்ற நாடுகளைவிட குறைந்த விலையில் கிடைக்கிறது.

மொத்தத் தேவையில் 82% எரிபொருளை இறக்குமதி செய்து கொள்ளும் இந்தியாவுக்கு ரஷ்யாவில் இருந்து கிடைக்கும் குறைந்தவிலை கச்சா எண்ணெய், உள்நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் வைத்துக்கொள்ள கிடைத்திருக்கும் நல்வாய்ப்பு.

இறுதி முடிவல்ல: அதிபரின் இந்த அறிவிப்பு இறுதியானது அல்ல.  ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருந்த கெடு முடிகிற காரணத்தினால் 25+ % அறிவிக்கப்பட்டிருக்கிறது. பேச்சு வார்த்தைகள் தொடர்கின்றன. அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஆகஸ்ட் மாத இறுதியில் டெல்லியில் நடக்க இருக்கிறது.  அதில் முடிவு எட்டப்பட்டால் வரி விகிதங்களில் மாற்றம் வரும்.

சமாளிக்கலாம்: பேச்சுவார்த்தை  முடியாமல் தொடர்வதற்கு காரணம், இந்தியா அதன் விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோரை காப்பாற்றுவதற்காக அமெரிக்க பொருட்களுக்கு இந்திய சந்தைகளை திறந்துவிட மறுப்பதுதான். அமெரிக்காவின் இந்த 25% +  அபராதம் இந்திய ஏற்றுமதியையும் அதன் மூலம் இந்திய பொருளாதாரத்தை பாதிப்பதைவிட,  அமெரிக்கா வலியுறுத்தும், ‘இந்திய சந்தைகளை அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு திறந்துவிடுவது’ கூடுதல் பாதிப்புகளைக் கொடுக்கும். அமெரிக்காவுக்கு இந்தியா செய்யும் மொத்த ஆண்டு பொருள் (மெர்கெண்டைஸ்) ஏற்றுமதி மதிப்பு 87 பில்லியன் டாலர்கள்.  இந்தியாவின் மொத்த பொருள் ஏற்றுமதியில் இது 20% மட்டுமே.  ரூ.330 லட்சம் கோடிக்கும் அதிகமான உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) அமெரிக்காவுக்கு செய்யும் ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு, வெறும் 2% தான். அந்தத் தொகை மீது மட்டுமே அமெரிக்காவால் கூடுதல்  வரி போட முடியும். தவிர, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு தடை விதிக்கவில்லை. வரியை அதிகரிக்கிறது.

யார் யாரையெல்லாம் பாதிக்கும்: இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்கும் வரியை அந்நாட்டு இறக்குமதியாளர்கள் செலுத்திவிட்டு பொருட்களின் விலையை உயர்த்தி சமாளிக்கலாம். அப்படிச் செய்தால், பாதிக்கப்படப் போவது அமெரிக்க நுகர்வோர்கள்தான்.

அதேநேரம் அமெரிக்க வியாபாரிகள், இந்தியாவைவிட குறைவான அமெரிக்க வரியை சந்திக்கிற நாடுகளிலிருந்து அதே பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளலாம். அப்படி நடந்தால் இந்தியாவின் ஏற்றுமதி அளவு குறையலாம். அல்லது, அவர்கள் இந்திய ஏற்றுமதியாளர்களிடம் விலையை குறைக்கச் சொல்லிக் கேட்கலாம். அதனால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களின் விலை குறைந்து, ஏற்றுமதியாளர்களின் லாபம் குறையலாம்.

அதேநேரம், இந்திய ஏற்றுமதியாளர்கள் குறைந்த விலைக்கு தர மறுத்து, வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். அல்லது, உள்நாட்டில் விற்பனை செய்யலாம். அதனால் கூடுதல் பொருட்கள் இந்திய சந்தைக்கு வந்து, உள்நாட்டில் விலை குறையும். அது, இந்திய நகர்வோருக்கு லாபம்.

ஆக, எப்படிப் பார்த்தாலும் அமெரிக்காவின்  25+% வரி என்ற அறிவிப்பு இந்தியப் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் ஒப்பீட்டு அளவில் சமாளிக்கக்கூடியதே. எனவே, அதைத் தவிர்ப்பதற்காக  கொஞ்சம் விட்டுக் கொடுப்பதென்றால், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொண்டு அமெரிக்காவிடம் இருந்து வாங்கலாம். மற்றபடி, அமெரிக்க வேளாண் பொருட்கள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த மாட்டோம் என்று இந்தியா சொல்வது சரியே.

காமராஜர் மக்கள் கட்சி – பொதுச் செயலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *