காவல்துறைத் தலைவர் நியமனத்தில் குழப்பம் ஏன்?
28/08/2025
தமிழக காவல்துறையின் தற்போதைய தலைவர் திரு சங்கர் ஜிவால் அவர்கள் வரும் 31ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்; அதற்குப்பின் தீயணைப்புத்துறை ஆணையத்திற்குத் தலைவராகப் பொறுப்பு ஏற்கிறார். தமிழக காவல்துறையின் தலைமைப் பொறுப்புக்கு யார் என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்பே மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட வேண்டிய பட்டியல் இதுவரை அனுப்பப்படவில்லை.
இவ்வாறு காலம் கடத்தியதால், தற்போது ஓர் இடைக்கால ஏற்பாடாக காவல் துறை தலைமைக்கு வெங்கட்ராமன் என்ற ஐபிஎஸ் அதிகாரியை பொறுப்பாளராக நியமிக்க உள்ளனர்.தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள காவல்துறையின் தலைமைப் பொறுப்பிற்கு அதிகாரி நியமிக்கப்படுவதிலேயே இத்தனை ஊசலாட்டம் என்றால் முதல்வர் அவர்களின் நிர்வாகத்தில் ஆட்சி இல்லை, அதிகாரிகள் சொல்படிதான் அவர் ஆடுகிறார் என்பது தெளிவாகிறது.

காவல்துறை தலைவர் நியமன விவகாரத்தில் ஏற்பட்டுள்ள இத்தனைக் குழப்பங்களுக்கும் முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்? தன் மாநில நிர்வாகத்தை சீர்பட நடத்திடத் தெரியாத, முடியாத முதல்வர் நாடு தழுவிய பிரச்சனைகளுக்கு எல்லாம் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்; உலா வந்து கொண்டிருக்கிறார்.


ஐயா முதல்வர் அவர்களே! தமிழக அரசு நிர்வாகத்தின் மீதும், தங்கள் பொறுப்பில் இருக்கும் காவல்துறையின் நிர்வாகத்திலும் முதலில் கவனம் செலுத்துங்கள் என்று காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
பா குமரய்யா,மாநிலப் பொதுச் செயலாளர், காமராஜர் மக்கள் கட்சி