தூய்மைப் பணியாளர்களின் துயர் தீர்த்திடுக
08/08/25
சென்னையில் தூய்மைப் பணியாளர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் நிர்வாக அலுவலகமான ரிப்பன் கட்டிடத்தில், கடந்த எட்டு நாட்களாக வேலை பாதுகாப்புக்காகவும், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை குறைக்காமல் வழங்க வேண்டும் என்றும் போராடி வருகின்றனர். போராடுகின்ற தூய்மைப் பணியாளர்களை இதுவரை ஒரு அதிகாரியும் சந்தித்து அவர்களது குறைகளை செவி மடுத்து கேட்கவில்லை. மேயர் பிரியா அவர்களும், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்துகிறார்.

‘ முதலமைச்சர் தொகுதியில் தொடர்ந்து15 மணி நேரம் பணி புரிந்துள்ளோம்; தனியார் நிறுவனத்திற்கு பணி மாற்றப்பட்டால், தற்போது பெறும் மாத ஊதியமான ரூபாய் 23 ஆயிரம், 13 ஆயிரம் ஆகக் குறைந்துவிடும் அச்சத்தில் உள்ளோம்; எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களை நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி தந்தார்கள்’ என்றெல்லாம் அந்தப் பணியாளர்கள் தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.


பொய்யான வாக்குறுதிகளை அளித்துவிட்டு இன்றைக்கு எத்தனையோ துறையினரை ஏமாற்றியது போல் இந்த எளிய மக்களையும் ஏமாற்றத் துடிக்கிறது திராவிட மாடல் அரசு. மேலும் காலம் தாழ்த்தாமல் போராடும் தூய்மைப் பணியாளர்களை அழைத்து அவர்களது வேலை நிலைமைகள் குறித்த அச்சத்தைப் போக்கி அவர்களைக் காப்பதோடு, குவிந்து வரும் குப்பை மலைகளில் இருந்தும், நோய்த் தொற்று அபாயங்களில் இருந்தும் மக்களையும் காக்க வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர், காமராஜர் மக்கள் கட்சி.