6 ஆண்டுகளாக செயல்படாத தொழிற்பேட்டை; சாக்கடை சுத்தம் செய்யாத நகராட்சி
22/08/2025
குப்பை அள்ளுவது, சாக்கடை சுத்தம் செய்வது என்றால் அது நகராட்சி வேலையே. அதை தனியாருக்கு கொடுத்து இருந்தாலும் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு நகராட்சிக்கு உண்டு என்பதை உணராமல் அலட்சியமாக இருக்கும் காரை நகராட்சி நிர்வாகம்.


மார்கெட் வீதியில் நேரு மார்கெட் மீன் கழிவுநீர், கோழி கழிவுநீர்கள் செல்ல முடியாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியில் முதன்மை பெறுகிறது! நீண்ட காலமாக சாக்கடை சுத்தம் செய்யாத காரணத்தால் அங்கு புல்பூண்டுகள் முளைத்து செழுமையாக உள்ளது. மக்களுக்கு மலேரியா, டெங்குக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தும் மாவட்ட நிர்வாகம் காரைநகராட்சி நிர்வாகத்திற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுகிறோம்.


6 ஆண்டுகளாக செயல்படாத தொழிற்பேட்டை !
காரைக்கால் பகுதியில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும் திரு-பட்டினம் போலகம் பகுதியில் புதுச்சேரி பிப்டிக் சார்பில் தொழில் மையங்கள் அமைக்கும் நோக்கில் 1999ம் ஆண்டு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.


நிலத்தை அரசு கையகப்படுத்துவதற்கு ரூபாய் 19,75,13,511 செலவிட்டது! மேலும் இந்த இடத்தை சுற்றிலும் வேலி அமைக்க 40,37,000 ரூபாய் செலவு செய்தது! அந்த பகுதியில் நீர் தேக்க தொட்டி அமைக்க ரூபாய் 24,06,000ம், சாலை அமைக்க 2கோடியும் என மொத்தம் 23கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது! ஆனால் கடந்த 26ஆண்டுகளில் இந்த பகுதியில் இது நாள் வரையில் எந்த ஒரு தொழில் மையங்களும் அமையவில்லை! அப்பகுதியில் கருவேலமரங்கள் செழிப்பாக வளர்ந்து உள்ளது.


பகல் நேரத்தில் திறந்த வெளி மது அருந்தும் இடமாகவும், இரவில் பாலின சமாசரங்களுக்கு உகந்த இடமாக சிறந்து விளங்குகிறது. இந்த 26 ஆண்டுகளில் பல கட்சிகள் ஆட்சியில் இருந்தது இதில் யாருக்கும் காரைக்கால் முன்னேற்றத்தில் சிறிதும் அக்கறை இல்லை என்பதை எடுத்து காட்டுகிறது. இதை வைத்து வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க செல்வதாக சொல்லி அரசு செலவில் வெளிநாடு பயணங்கள் சென்றார்கள் அமைச்சர்கள்.
ஒரு நிறுவனத்தின் முதலீடு கூட வரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இந்த 26ஆண்டில் காரைக்காலை சேர்ந்தவர்களும் தொழிற்துறை அமைச்சராக இருந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆட்சியாளர்களால் புறக்கணிப்படும் காரைக்கால் தனி யூனியன் பிரதேசமாக மாறினால் மட்டுமே முன்னேற்றம் இருக்கும் என பல்வேறு கோரிக்கைளை காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது .