அரசு மருத்துவர்களைப் பழி வாங்காதீர்!
08/09/25
சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் செல்லும் பயணிகள், விமான நிலைய ஓடுதளத்தில் நீண்ட நேரம் பயணித்து விமானத்தை சென்றடைவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். மக்கள் குறை தீர்க்க, பிரச்சனைகளை இப்படித் தேடித் தேடி பணியாற்றும் மா சு அவர்கள், தனது பொறுப்பில் இருக்கும் மக்கள் நல்வாழ்த்து துறை அவலங்களைக் களைவதை அயல் பணி என்று கருதுகிறாரோ?

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், தங்களின் பிதாமகன் கலைஞர் வெளியிட்ட அரசு ஆணையை நடைமுறைப்படுத்துங்கள், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த மருத்துவர் விவேகானந்தரின் மனைவிக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்குங்கள என்று தொடர்ந்து போராடி வரும் மருத்துவர்கள் குறை தீர்க்க மட்டும் மனம் வரவில்லை.


மேலே குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்மையில் மேட்டூரில் இருந்து மருத்துவர் சட்டப் போராட்டக் குழுத் தலைவரான மருத்துவர் பெருமாள் தலைமையில் அரசு மருத்துவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டனர். நடைப்பயணத்தை மறித்து அவர்களைக் கைது செய்த, ஜனநாயகக் காவலர்கள் என்று தங்களைத் தாங்களே போற்றிக் கொள்ளும் திராவிட மாடல் அரசு, அந்தப் போராட்டக் குழுவின் தலைவரான மருத்துவர் பெருமாள் அவர்களை நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பணி மாறுதல் செய்துள்ளது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது மு க ஸ்டாலின் அவர்களால் வாக்கு வங்கியாகப் பார்க்கப்பட்ட மருத்துவர்கள், இன்று பகைவர்கள் ஆகிவிட்டனர். மருத்துவர் பெருமாள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளை ரத்து செய்வதோடு, மீண்டும் அவரை சென்னைக்கு பணி மாறுதல் செய்ய வேண்டுமென்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர், காமராஜர் மக்கள் கட்சி.

