கொசு உற்பத்தி ; காரைக்கால் நகராட்சி விதிகளை முறையாக பின்பற்றாமல் அலட்சியம்
9/09/2025
காரைக்கால் நகராட்சி விதிகளை முறையாக பின்பற்றாமல் அலட்சியம் காட்டி வருவதாலும், வழக்கத்திற்கு மாறாக நிலவும் தட்பவெப்பநிலை காரணமாகவும் கொசு உற்பத்தி அதிகரிக்க தொடங்கி உள்ளது. நகர பகுதியில் கழிவுநீர் பாதைகளை சுத்தம் செய்ய 5பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்! சுழற்சி முறையில் சாக்கடைகளை சுத்தம் செய்து வருகின்றனர்.

தொடங்கிய இடத்திற்கு மீண்டும் வர 6-7மாதம் ஆகிறது. அது நாள் வரையில் அப்பகுதியில் கொசு உற்பத்தி அமோகமாக நடக்கிறது. கழிவுநீர் பாதை சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. நகர்பகுதியில் காலி வீட்டு மனைகளில் மழைநீர் குட்டையை போல் தேங்கி கொசு உற்பத்தி கூடாரமாக விளங்குகிறது.
பொதுவெளியில் நிற்பதற்கு கூட மக்கள் அஞ்சுகின்ற நிலை உள்ளது. கொசு தொல்லை,டெங்கு, மஞ்சள் காய்ச்சல், மலேரியா, சிக்கன் குனியா சம்மந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினால் மட்டும் போதாது, கொசுக்களை அழித்தால் மட்டுமே அவைகளால் உருவாகும் நோய்களை தடுக்க முடியும். கொசு உற்பத்திக்கான போட்டி வைத்தால் காரைநகராட்சிக்கு சூப்பர் முதலிடம் கிடைக்கும். பொதுமக்கள் கொசு தொல்லைக்கு பயந்து நிம்மதியாக தூங்க ஊதுபத்தி, சுருள் என கொளுத்தி வைத்து கதவுகளை மூடி விடுகிறார்கள் இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை, மனிதனின் சுவாச பையில் நச்சு பொருள்களை கலந்து மார்புசளி,தும்மல், தலைவலி, இருதய நோய்களை உருவாக்குகிறது.
ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை டெங்கு காய்ச்சல் அதிகரிக்க கூடிய காலம் என்பதை உணர்ந்து காரைக்கால் மாவட்ட நிர்வாகம் கொசு உற்பத்தியை தடுக்க, கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என காரைக்கால் காமராஜர் மக்கள் கட்சி  கேட்டுக்கொள்கிறது.

