காகிதக் குப்பியில் மது – மக்களை மீட்கவா?
புதிதாய் மது அருந்துபவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கி மதுப் பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் துவக்கத்திலேயே தடுத்து நிறுத்துமாறு டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு கருத்துரை வழங்கப்பட்டு இருக்கிறது என்று மது விற்பனை அமைச்சர் மாண்புமிகு முத்துசாமி அவர்கள் அண்மையில் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்கள். மது எளிதில் கிடைக்கும் என்ற சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலே பெரும்பாலோர் மதுவின் பிடியிலிருந்து வெளியே வருவர்.
அதற்கு கடைகள் அருகாமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்; மதுபானக் கூடங்களுக்கு மூடு விழா நடத்த வேண்டும்; கடைகளின் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும்; கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்.
மாண்புமிகு அமைச்சர் பேசுவதும், செயல்படுவதும், எதிர் எதிர் திசையில் இருக்கின்றன. ஒரு பக்கம், புதிய வகை மதுபானங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன; அளவுகள் குடிமக்களின் குடி அளவுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்படுகின்றன.
அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல், இப்போது காகிதக் குப்பியில் (Tetra pack) மது விற்பனை செய்வது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது. கண்ணாடிக் குப்பிகளைக் கண்ட இடங்களில் உடைத்து எறிவதால் ஏற்படும் இடர்ப்பாடுகளைக் களையவே இந்த ஏற்பாடு என்ற விளக்கமும் தரப்படுகிறது. காகிதக் குப்பிகள், குப்பைகளாகத் தேங்கி சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்கப் போவதை மறந்து விட்டு அரசு செயல்படுவது கண்டனத்திற்கு உரியது.
ஏற்கனவே ஒரு கோடித் தமிழர்கள் மதுவுக்கு அடிமையாக உள்ள நிலையில், அந்த எண்ணிக்கையை மேலும் வளர்த்தெடுக்க, இந்த காகிதக் குப்பி மது விற்பனை உதவும். மதுப் பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், என்று அனைத்துத் தரப்பினரும் எளிதில் எடுத்துச் செல்ல இது வழி வகுக்கும். கல்விக்கூடங்களில், பணியிடங்களில் எந்தவித கூச்சமும், அச்சமும் இல்லாமல், குளிர்பானங்களை அருந்துவது போல் மதுவைக் குடிக்கும் சூழலை உருவாக்கும். எனவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் காகிதக் குப்பியில் மது விற்பனை போன்ற விபரீத சிந்தனைகளை விட்டுவிட்டு மதுவின் பிடியில் இருந்து மக்களை மீட்டெடுக்க ஆக்கபூர்வமான வழியில் சிந்திக்க வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
வணக்கத்துடன்
தமிழருவி மணியன்
தலைவர் – காமராஜர் மக்கள் கட்சி