அன்பிற்கினிய சுபவீ…. வணக்கம். வளர்க நலம்
உங்கள் பதிவை நண்பர் மூலம் பார்க்க நேர்ந்தது. நயத்தகு நாகரிகத்துடன் என் அரசியல் நிலைப்பாட்டை நீங்கள் விமர்சனம் செய்திருப்பதில் எனக்கு எள்ளளவும் வருத்தமில்லை. ஒருவரைக் காயப்படுத்த வேண்டும் என்ற மிக மலினமான நோக்கத்தில் இழிசொற்களைப் பயன்படுத்தும் கழிவறை எழுத்தாளர்கள் பல்கிப் பெருகிவிட்ட காலத்தில் அறிவார்ந்த விமர்சனக் கணைகளை வீசியிருக்கும் உங்கள் அறிவொழுக்கம் (Intellectual honesty) உண்மையில் மேன்மையானது.
தமிழருவி மணியன் என்று தன்னை அழைத்துக் கொள்வது தகுமா? என்கிறீர்கள். பாவேந்தர் ஏன் பாரதிதாசன் ஆனார்? சுரதா, கம்பதாசன், கண்ணதாசன் பற்றியெல்லாம் உங்கள் கருத்து என்ன? நெஞ்சில் வைத்து நேசிக்கும் ஒருவரிடம் தனக்குள்ள எல்லையற்ற அன்பின் வெளிப்பாடுதானே அந்தப் புனைபெயர்கள்? காமராசரை நான் வழிபடு கடவுளாகப் போற்றுகிறேன். அவர் வழங்கிய அடைமொழியை அவர் நினைவாக என் பெயருடன் இணைத்து அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் கொண்டேன்.
என்னளவில் அது கலைஞர் என்பது போல் அடைமொழியன்று. என் பெயர் தமிழருவி மணியன். அரசு கெசட்டில் பதிந்த பெயர் அது. இலக்கிய மேடைகளில் எத்தனையோ அடைமொழிகளை எனக்கு அளித்திருந்தாலும் அவற்றுள் ஒன்றையும் நான் பொருட்படுத்தியது இல்லை. நான் பங்கேற்கும் நிகழ்வுகளில் அறிமுகப்படுத்த தற்குறிப்பு கேட்பார்கள்.
தமிழருவி மணியன் பேசுவார் என்பதற்கு மேல் எதையும் சொல்ல வேண்டியது இல்லை என்பவன் நான். என் தோள்களில் மாலையிட்டு நிலைக் கண்ணாடியின் முன் நின்று அழகு பார்க்கும் மனநோயாளி இல்லை நான்.
கலைஞரை யாரும் கருணாநிதி என்று அழைத்துவிடக் கூடாது என்பது எழுதப்படாத சட்டம் என்பதை உங்கள் மனம் அறியும்.
இன்றைய பாஜக அன்று ஜனசங்கமாக இருந்தபோது அதனோடு 1971இல் கூட்டணியமைத்து “நாட்டைக் காப்போம், ஜனநாயகத்தைக் காப்போம்” என்று குரல் கொடுத்தவர்தான் காமராசர். நான் சொந்த நலனுக்காக கட்சி மாறுபவன் அல்லன். ஜீவாவோ, பெரியாரோ சுயநலனுக்காக கட்சி மாறியதில்லை. அவர்களைப் போன்றவன்தான் நானும். நான் ஒரு பிழைப்புவாதி இல்லை.
காங்கிரசை எதிர்த்த பெரியார், காமராசர் என்ற தனி மனிதரைத்தான் நம்பினார். ரஜினி எந்த வகையிலும் காமராசர் இல்லை. ஆயினும் அவர் மீது மூட பக்தி கொண்டவர்களைக் கொண்டு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றேன்.
அதனால் ரஜினியின் அழைப்பை நான் ஏற்றேன்.
கழகத்தின் மீது ஏன் வன்மம் என்று கேட்கிறீர்கள். உங்களைப் போன்ற அறிவுஜீவிகளின் போக்கை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஊழல் மலிந்த மிகத் தவறான வாழ்வியலை மேற்கொண்டவர்கள் மீது என்னால் நேசம் கொள்ளவியலாது.
விலகியவன் ஏன் வந்தாய் என்கிறீர்கள். நான் மதிக்கும் நீதியரசர்கள் முதற்கொண்டு நேரிய அரசியலைக் காண விழையும் பலர் என் முடிவை மறுவாசிப்பு செய்யும்படி கேட்டதால் இந்தப் பாழ்பட்ட அரசியல் களத்தில் மீண்டும் கால் பதித்தேன். நான் என்னை மாணிக்கம் என்று கூறியிருந்தால் என்ன தவறு?
தன்னுடை ஆற்றல் உணராரிடையில் தன்னைப் புகழ்தலும் தகும் என்று நன்னூல் சொல்லவில்லையா?என் உடல் நலம் குறித்து உண்மையான அன்புடன் நீங்கள் பரிந்துரைத்தபடி சினம் தவிர்த்து மென்மையாக என் கருத்துகளை இனி நான் வெளிப்படுத்த முயல்வேன்.
அரசியலே வேண்டாமென்று 1952இல் ஒதுங்கிய ஜெபி ஊழலுக்கு எதிராகப் போர் நடத்த 1975இல் மீண்டும் அரசியல் உலகில் வந்து நின்றதை நீங்கள் அறியாதவரில்லை. உங்கள் விரிந்த வாசிப்பு, பூத்தொடுப்பதுபோல் வார்த்தைகளைத் தொடுத்துப் பேசும் பாங்கு, பெரியாரியலில் பூண்டிருக்கும் பற்று, இனிமை தவழ உரையாடும் பண்பாடு ஆகியவற்றை என்றும் நேசிக்கும் நெஞ்சம் எனக்குண்டு. அன்புத் தோழர் அருள்மொழியும் நீங்களும் எப்போதும் என் நிறம் மாறாத அன்பிற்குரியவர்கள்.
அன்புடன்
தமிழருவி மணியன்
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியதைப் போன்ற அருமையான பதிவு தமிழருவி ஐயா அவர்களுக்கு நன்றி