பள்ளிகளில் சிசிடிவி – சிபிஎஸ்இ-யின் நல்ல முடிவு
கல்வி வாரியமான சிபிஎஸ்இ அதன் LD கட்டுப்பாட்டில் வரும் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான அங்கீகார நிபந்தனை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் 580 பள்ளிகள் உட்பட நாடு முழுவதும் 28 ஆயிரம் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றி மாணவர்களுக்கு கல்வி புகட்டி வருகின்றன.
இந்த பள்ளிகளில் 2 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவர் களின் நலன்கருதி, கழிப்பறை பகுதிகளைத் தவிர்த்து, நுழை வாயில், வெளியேறும் வழி, வகுப்பறை, நடைபாதை என பள்ளிகளில் மாணவர்கள் புழங்கும் அனைத்து பகுதிகளிலும் அதிக திறன்வாய்ந்த சிசிடிவி கேமராக்களை பள்ளிகள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் பதிவுகளை குறைந்தபட்சம் 15 நாட்கள் வரை பதிவு செய்து, அதிகாரிகள் கேட்கும்போது வழங்கும் வகையில் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது பாராட்டத்தக்க நடவடிக்கையாகும்.
