ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
31/07/2025
நெல்லையைச் சேர்ந்த கவின்குமார் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கவின்குமார் காதலித்த பெண்ணின் சகோதரர் சுஜித் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டு இருக்கிறார். இவரின் தாயும், தந்தையும் காவல்துறையில் பணியாற்றுகிறார்கள்.
இந்த வழக்கை மெத்தனமாக காவல்துறை கையாளுவதற்கு இது ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. பொது வெளியில் உருவான அழுத்தத்தினால், நான்கு நாட்களுக்குப் பிறகு தந்தை கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்னும் தாயைத் தேடுகிறார்கள். வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி இருக்கிறார்கள். வேங்கை வயல் வழக்கு விசாரணை போல் இல்லாமல் இந்தக் குற்றப் பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை பெற்றுத் தர காவல் துறைக்கு பொறுப்பு வைக்கும் முதல்வர் அந்தத் துறையை முடுக்கி விட வேண்டும். ஏழை எளியவர்கள் மீது குற்றம் சாற்றப்பட்ட நிலையிலேயே, அதிதீவிரமாக செயல்படுகிறது, காவல் துறை.

இந்த நிலையை நாம் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமாரின் மீதான விசாரணையில், விசாரணை என்ற பெயரில் அவரைத் துன்புறுத்தி அவரது உயிருக்கு எமனாக காவல் துறை இருந்ததையும் பார்த்தோம். ஆனால் இந்த வழக்கில் குற்றவாளியின் பெற்றோர், தங்கள் துறையைச் சார்ந்தவர்கள் என்பதால், முறையான விசாரணைக்கே அழுத்தம் வேண்டி இருக்கிறது. தொடரும் ஆணவக் கொலைகளைப் பார்க்கின்ற பொழுது, ‘ பெரியார் பிறந்த மண், சமூக நீதி தழைத்து ஓங்குகிறது’ என்பதெல்லாம் வெறும் பேச்சு அளவிலேயே இருப்பது தெரிகிறது; மக்கள் மனங்களில் மாற்றத்தை உருவாக்கவில்லை.

அதுவும் இளம் தலைமுறைகளே, இந்தப் படுபாதகச் செயல்களில் ஈடுபடுவது நம் கவலையை இன்னும் அதிகரிக்கிறது. திமுக கொடுத்த, நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் பட்டியலில் ஒன்றாக இருக்கும் ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை, இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். தனிமனித ஒழுக்கம், தன்னலமற்ற சேவை மனப்பான்மை, சமூக நல்லிணக்கம், பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல், மனித நேயம் போன்ற குண நலன்களை இளம் பருவத்திலேயே வளர்த்தெடுக்கும் விதமாக, கல்விக் கூடங்களில் அறநெறி வகுப்புகளை உடனடியாகத் துவங்க வேண்டும் என்று தமிழக அரசை காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
பா குமரய்யா, மாநில பொதுச் செயலாளர், காமராஜர் மக்கள் கட்சி